காங்கிரசில் இருந்து விலகிய எச்.விஸ்வநாத் தேவேகவுடா முன்னிலையில் ஜனதா தளம்(எஸ்) கட்சியில் சேர்ந்தார்

காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகிய எச்.விஸ்வநாத், தேவேகவுடா முன்னிலையில் ஜனதா தளம்(எஸ்) கட்சியில் சேர்ந்தார்.;

Update: 2017-07-04 22:00 GMT

பெங்களூரு,

காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகிய எச்.விஸ்வநாத், தேவேகவுடா முன்னிலையில் ஜனதா தளம்(எஸ்) கட்சியில் சேர்ந்தார்.

கொள்கை மாறவில்லை

காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகிய மூத்த தலைவர் எச்.விஸ்வநாத், தேவேகவுடா முன்னிலையில் பெங்களூரு சேஷாத்திரிபுரத்தில் உள்ள அக்கட்சியின் அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ஜனதா தளம்(எஸ்) கட்சியில் சேர்ந்தார். இதில் எச்.விஸ்வநாத் பேசியதாவது:–

என்னுடைய அரசியல் என்பது ஒரே இடத்தில் தேங்கி நிற்கும் தண்ணீர் போன்றது இல்லை. இது சங்கமம். எந்த கட்சி(காங்கிரஸ்) ஆட்சி அதிகாரத்திற்கு வர வேண்டும் என்று உழைத்தேனோ, அதே உற்சாகத்தில் இங்கும் பணியாற்றுவேன். நான் கட்சி மாறினாலும் என்னுடைய கொள்கை மாறவில்லை. கட்சி கொடி மட்டுமே மாறியுள்ளது.

தீவிரமாக ஈடுபடுவேன்

தேவேகவுடாவின் வழிகாட்டுதலில் குமாரசாமியுடன் இணைந்து கட்சியை பலப்படுத்தும் பணியில் தீவிரமாக ஈடுபடுவேன். 2006–ம் ஆண்டு குமாரசாமி முதல்–மந்திரியாக இருந்தபோது விதான சவுதாவில் அவரை நான் பாராட்டி பேசினேன். இப்போது அவருடன் இணைந்து பணியாற்ற வாய்ப்பு கிடைத்துள்ளது. இது தான் யோகம் என்பது.

ஜனதா தளம்(எஸ்) ஒரு மாநில கட்சியாக இருந்தாலும், இந்த கட்சியை சேர்ந்தவர்கள் நாட்டின் பிரதமராக, மாநில முதல்–மந்திரியாக பணியாற்றி இருக்கிறார்கள். நாட்டின் பிரதமர் பதவியில் அமருவது என்பது சாதாரண வி‌ஷயம் அல்ல. அதனால் இந்த கட்சியை தரம் தாழ்த்தி பேசக்கூடாது. நான் மாநிலம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்து கட்சியை பலப்படுத்தும் பணியை செய்வேன்.

வரலாற்று சிறப்பு மிக்க நாள்

என்னுடைய நீண்ட அரசியல் பயணத்தில் இன்று(அதாவது, நேற்று) ஒரு வரலாற்று சிறப்பு மிக்க நாள் ஆகும். கர்நாடகத்தில் ஜனதா தளம்(எஸ்) கட்சி ஆட்சியை பிடிக்க வேண்டும் என்று கோவிலில் பூஜை நடத்திவிட்டு இங்கு வந்துள்ளேன். நான் முன்பு இருந்த காங்கிரஸ் கட்சியை பற்றி பேசுவதால் எந்த பயனும் இல்லை.

இவ்வாறு எச்.விஸ்வநாத் பேசினார்.

இதில் காங்கிரசை சேர்ந்த முன்னாள் எம்.எல்.ஏ. பசவராஜ் உள்பட பலர் நேற்று ஜனதா தளம்(எஸ்) கட்சியில் சேர்ந்தனர். முன்னாள் முதல்–மந்திரி குமாரசாமி, கர்நாடக மேல்–சபை ஜனதா தளம்(எஸ்) குழு தலைவர் பசவராஜ் ஹொரட்டி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்