பெங்களூருவில், முகநூல் உதவியுடன் ரோட்டில் கிடந்த செல்போன் உரியவரிடம் ஒப்படைப்பு

பெங்களூருவில் முகநூல் உதவியுடன் ரோட்டில் கிடந்த செல்போன் உரியவரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது;

Update: 2017-07-04 21:30 GMT

பெங்களூரு,

பெங்களூருவில் முகநூல் உதவியுடன் ரோட்டில் கிடந்த செல்போன் உரியவரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக போலீஸ்காரர், போலீஸ் இன்ஸ்பெக்டருக்கு உயர் போலீஸ் அதிகாரிகள் பாராட்டி உள்ளனர்.

ரோட்டில் கிடந்த செல்போன்

பெங்களூரு அல்சூர் போக்குவரத்து போலீஸ் நிலையத்தில் போலீஸ்காரராக பணியாற்றி வருபவர் அமீர் ஹம்சா. இவர் கடந்த 1–ந்தேதி இந்திரா நகர் 100 அடி ரோட்டில் சென்றார். அப்போது ரோட்டில் ரூ.50 ஆயிரம் மதிப்புள்ள ஒரு செல்போன் கிடந்தது. அவர் அந்த செல்போனை எடுத்தார். அந்த செல்போனை ‘ஆன்‘ செய்து அது யாருடையது? என பார்க்க முயன்றார். ஆனால் அந்த செல்போன் கடவுச்சொல் மூலம் ‘லாக்‘ செய்யப்பட்டிருந்தது. பின்னர் அந்த செல்போனை தேடி யாராவது வருவார்களா? என சிறிது நேரம் அங்கேயே அவர் காத்து நின்றார். ஆனால் யாருமே வரவில்லை.

இதனால் அவர் போலீஸ் நிலையத்திற்கு சென்று செல்போனை போலீஸ் இன்ஸ்பெக்டர் யோகேசிடம் கொடுத்தார். யோகேஷ், அந்த செல்போனில் இருந்து போலீஸ் கட்டுப்பாட்டு அறையை 100 என்ற எண் மூலம் போன் செய்து தகவலை தெரிவித்தார் மேலும், போலீஸ் கட்டுப்பாடு அறையில் பதிவாகும் தான் பேசும் செல்போனின் எண்ணையும் அவர் கேட்டு அறிந்து கொண்டார்.

முகநூல் மூலம்...

பின்னர் யோகேசும், போலீஸ்காரர் அமீர் ஹம்சாவும் சேர்ந்து அந்த செல்போன் எண்ணை பயன்படுத்தும் நபரின் பெயரை ‘ட்ரூ காலர்‘ என்ற செயலி மூலம் கண்டுப்பிடிக்க முயற்சித்தனர். அப்போது அந்த செல்போன் எண்ணை பூஜா சிட்காரா என்பவர் பயன்படுத்துவது தெரியவந்தது. இதனால், செல்போன் அவருக்கு சொந்தமானதாக இருக்கலாம் என அவர்கள் நினைத்தனர்.

இதற்கிடையே, பூஜா சிட்காராவை முகநூலில் (பேஸ்புக்) தேட தொடங்கினர். இதன் பயனாக முகநூலில் அவரை, அவர்கள் கண்டுப்பிடித்தனர். பின்னர், அவர்கள் பூஜா சிட்காராவுக்கு குறுஞ்செய்தி அனுப்பி சம்பவத்தை கூறியதோடு, தவறவிட்ட செல்போனை அல்சூர் போலீஸ் நிலையத்தில் வந்து வாங்கி செல்லும்படி கூறினார்கள்.

இதை பார்த்த பூஜா சிட்காரா, தான் தற்போது உத்தரபிரதேசத்தில் இருப்பதாகவும், பெங்களூருவில் உள்ள தனது நண்பர் ராஜூவை போலீஸ் நிலையத்திற்கு அனுப்பி வைப்பதாகவும், அவரிடம் செல்போனை கொடுக்குமாறும் கூறினார். மேலும், போலீஸ் நிலையம் செல்லும் தனது நண்பர் ராஜூவின் அடையாளத்தையும் அவர் போலீசாரிடம் கூறினார்.

ஒப்படைப்பு

அதன்பிறகு ராஜூ, அல்சூர் போலீஸ் நிலையத்திற்கு சென்று இன்ஸ்பெக்டர் யோகேஷ், போலீஸ்காரர் அமீர் ஹம்சாவை சந்தித்தார். இதையடுத்து, பூஜா சிட்காராவின் செல்போனை போலீஸ்காரர் அமீர் ஹம்சா, ராஜூவிடம் ஒப்படைத்தார். இதன் தொடர்ச்சியாக போலீஸ்காரர் அமீர் ஹம்சா, இன்ஸ்பெக்டர் யோகேஷ் ஆகியோருக்கு பூஜா சிட்காராவும், ராஜூவும் நன்றி தெரிவித்தனர்.

இந்த சம்பவம் குறித்து அறிந்து பெங்களுரு மாநகர போலீஸ் கமி‌ஷனர் பிரவீன் சூட், பெங்களூரு மாநகர போக்குவரத்து கூடுதல் போலீஸ் கமி‌ஷனர் ஹிதேந்திரா மற்றும் உயர் போலீஸ் அதிகாரிகள் ஆகியோர் போலீஸ்காரர் அமீர் ஹம்சா, இன்ஸ்பெக்டர் யோகேஷ் ஆகியோரை பாராட்டினர். இந்த விவகாரம் குறித்து பெங்களூரு மாநகர போலீசாரின் சமூக வலைத்தளங்களிலும் பதிவிடப்பட்டு உள்ளது. இதனால், அங்கும் அவர்களுக்கு பொதுமக்களிடம் இருந்தும் பாராட்டுகள் குவிந்து வருகின்றன.

மேலும் செய்திகள்