திருப்பூர் மாவட்டத்தில் சுகாதார பணிகளை அதிகாரிகள் கண்காணிக்க கலெக்டர் உத்தரவு

திருப்பூர் மாவட்டத்தில் சுகாதார பணிகளை அதிகாரிகள் கண்காணிக்க வேண்டும் கலெக்டர் கே.எஸ்.பழனிசாமி உத்தரவு;

Update: 2017-07-04 22:30 GMT

திருப்பூர்,

திருப்பூர் மாவட்ட பொது சுகாதார துறை மற்றும் நகராட்சி நிர்வாகம் மூலம் மேற்கொள்ளப்பட்டு வரும் திட்டப்பணிகள் குறித்த ஆய்வுக்கூட்டம் திருப்பூர் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் கலெக்டர் கே.எஸ்.பழனிசாமி தலைமையில் நேற்று நடைபெற்றது. கூட்டத்தில் கலெக்டர் பேசும் போது கூறியதாவது:–

நகராட்சி பகுதிகளில் பொதுமக்களுக்கு வழங்கப்படும் குடிநீர் சுகாதாரமான முறையில் உள்ளதா? என்பதை உறுதி செய்து கொள்ள வேண்டும். மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிகளில் இருந்து குடிநீர் வழங்கும் பகுதிகளில் வாரம் ஒருமுறை நீர்த்தேக்க தொட்டிகளை சுத்தம் செய்து குளோரின் பவுடர் தெளித்து குடிநீர் வினியோகம் செய்ய வேண்டும். பொதுமக்களுக்கு திடீரென வயிற்றுப்போக்கு, காய்ச்சல் போன்ற அறிகுறிகள் தென்பட்டால் அவற்றை கண்காணித்து சுகாதார அலுவலர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும். பொதுமக்களுக்கு சிரமம் இல்லாமல் குடிநீர் கிடைக்க தேவையான முன்னேற்பாடுகளை அதிகாரிகள் செய்ய வேண்டும்.

மேலும் நகராட்சி, பேரூராட்சி, ஊராட்சி பகுதிகளில் சுகாதார பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதை அதிகாரிகள் கண்காணிக்க வேண்டும். மழைக்காலம் தொடங்க உள்ளதால் சிறியவர் முதல் பெரியவர் வரை காய்ச்சிய குடிநீரை பயன்படுத்த அறிவுறுத்த வேண்டும். பொதுமக்களிடம் நிலவேம்பு கசாயம் பயன்படுத்த வலியுறுத்த வேண்டும். பள்ளிகளில் மாணவ–மாணவிகள் தொடர் விடுப்பில் இருந்தால் அதற்குரிய காரணத்தை ஆசிரியர்கள் தெரிந்து காய்ச்சல் என்பது தெரியவந்தால் சுகாதார பணியாளர்களுக்கு தெரிவிக்க வேண்டும். நடமாடும் மருத்துவக்குழு மூலமாக பொதுமக்கள் அதிகம் வசிக்கும் பகுதிகளில் சுகாதாரம் குறித்து அதிகாரிகள் கண்காணிக்க வேண்டும்.

மேலும் செய்திகள்