தமிழக அரசு விவசாயிகளுக்கு துரோகம் செய்யும் அரசாக உள்ளது: ஜி.கே.வாசன்
தமிழக அரசு விவசாயிகளுக்கு துரோகம் செய்யும் அரசாக உள்ளது என்று த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் கூறினார்.
ஈரோடு,
தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் ஈரோடு, கோவை, திருப்பூர், நீலகிரி, நாமக்கல், சேலம் ஆகிய மாவட்ட தலைவர்கள், கட்சி பொறுப்பாளர்களுக்கான கலந்தாய்வு கூட்டம் ஈரோடு அருகே உள்ள சோளங்காபாளையத்தில் நடந்தது.
கூட்டத்துக்கு த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் தலைமை தாங்கினார். மாநில நிர்வாகிகள் கோவை தங்கம், ஆறுமுகம், எஸ்.டி.சந்திரசேகர் ஆகியோர் கலந்து கொண்டு மாவட்ட தலைவர்கள் மற்றும் பொறுப்பாளர்களிடம் கலந்துரையாடி, கட்சி வளர்ச்சி பணிகள் குறித்து பேசினார்கள்.
முன்னதாக த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:–
பெருந்தலைவர் காமராஜர் பிறந்த ஜூலை 15–ந் தேதி சென்னை மாங்கொல்லையில் த.மா.கா. சார்பில் பொதுக்கூட்டம் நடக்கிறது. இதுபோல் மூப்பனார் பிறந்தநாள் விழா விவசாயிகள் தின பொதுக்கூட்டமாக சிதம்பரத்தில் நடக்கிறது.
விவசாயிகளுக்கு பாதிப்பு ஏற்படும்போது அவர்களின் விவசாய கடன்களை ரத்து செய்வதுதான் நல்ல அரசாக இருக்க முடியும். ஆனால் 5 ஏக்கருக்கு மேல் நிலம் வைத்து இருக்கும் விவசாயிகளுக்கும் கடன் தள்ளுபடி செய்ய வேண்டும் என்ற மதுரை ஐகோர்ட்டின் உத்தரவை எதிர்த்து தமிழக அரசு சுப்ரீம் கோர்ட்டில் மனு செய்து, அதன் மூலம் கடன் தள்ளுபடிக்கு தடை பெற்று இருக்கிறது. சுப்ரீம் கோர்ட்டும், விவசாயிகளின் நலன் காக்க விரும்பாமல், தடை விதித்து இருக்கிறது. அதன்படி தற்போதைய தமிழக அரசு விவசாயிகளுக்கு எதிராக, விவசாயிகளுக்கு மாபெரும் துரோகம் செய்யும் அரசாக உள்ளது.
தமிழகம் முழுவதும் வரலாறு காணாத வறட்சி பாதித்து உள்ளது. காவிரி நடுவர் மன்ற உத்தரவின்படி கர்நாடகம் காவிரியில் தண்ணீர் திறந்து விட வேண்டும்.
கதிராமங்கலம் கிராமத்தில் தேசிய எண்ணை மற்றும் கியாஸ் நிறுவனம் எண்ணை எடுக்கும் பகுதியை நான் நேரில் பார்வையிட்டேன். அங்கு பொதுமக்கள் குடிக்கும் தண்ணீரிலும் எண்ணை கலந்து வருகிறது. இது மிகவும் பாதிப்பு ஏற்படுத்தும். ஆனால் மத்திய, மாநில அரசுகள் தேசிய எண்ணை மற்றும் கியாஸ் நிறுவனத்துக்கு ஆதரவாக ஓட்டு போட்ட மக்களுக்கு துரோகம் செய்கின்றன.
இந்த விஷயத்தில் நியாயமான உணர்வுடன் போராடும் கதிராமங்கலம் பொதுமக்களை அச்சுறுத்தி, அடக்கி, ஒடுக்க நினைப்பதும், அவர்கள் மீது பொய் வழக்குகள் போட்டு சிறையில் அடைப்பது போன்ற அத்துமீறல்களையும் ஏற்றுக்கொள்ள முடியாது.
மணல் தட்டுப்பாடு காரணமாக கட்டுமான பணிகள் நிறுத்தப்பட்டு தொழிலாளர்கள் வேலை வாய்ப்பு இழந்து வருகிறார்கள். எனவே மாற்று மணலுக்கான ஏற்பாடுகளை அரசு உடனடியாக செய்ய வேண்டும்.
சரக்கு மற்றும் சேவை வரி (ஜி.எஸ்.டி.) அவசர கோலத்தில் கொண்டு வரப்பட்டு உள்ளது. இந்த வரியால் தீப்பெட்டி தொழிற்சாலை, பட்டாசு தொழிற்சாலை, ஜவுளி உற்பத்தி, உணவக தொழில்கள் கடுமையாக பாதிக்கப்படுவதுடன், தொழிலாளர்களுக்கு வேலை இழப்பும் ஏற்படும். இதனை சரி செய்து எந்த வகையிலும் பொதுமக்களும், சிறு வணிகர்கள், உற்பத்தியாளர்கள் பாதிக்கப்படாத நிலையை மத்திய அரசு எடுக்க வேண்டும். இதற்கான ஒரு கால அவகாசத்தில் வரி முறைப்படுத்தப்படவில்லை என்றால் சரக்கு மற்றும் சேவை வரிக்கு எதிராக தமிழ் மாநில காங்கிரஸ் சார்பில் மிகப்பெரிய ஆர்ப்பாட்டம் நடைபெறும்.
சரக்கு மற்றும் சேவை வரி அமல்படுத்தப்பட்ட நேரத்தில் காங்கிரஸ் கட்சி விவாதத்தில் பங்கேற்காமல் புறக்கணித்து இருக்க கூடாது. பாராளுமன்றத்தில் தங்கள் எதிர்ப்பை பதிவு செய்து இருக்க வேண்டும். தடை செய்யப்பட்ட குட்கா பொருட்களை விற்பனை செய்ய லஞ்சம் வாங்கியவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது முறையான விசாரணை நடத்தி தண்டனை வழங்கப்பட வேண்டும். இதில் மத்திய–மாநில அரசுகள் மனசாட்சியுடன் செயல்பட வேண்டும்.
தேச நலனில் அக்கறை கொண்ட, அனைத்து மக்களையும் சமமாக ஏற்றுக்கொள்கிற ஒருவர் ஜனாதிபதியாக வரவேண்டும். இவ்வாறு த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் கூறினார்.
பேட்டியின் போது இளைஞர் அணி மாநில தலைவர் எம்.யுவராஜா, மாவட்ட தலைவர் விஜயகுமார், இளைஞர் அணி மாவட்ட தலைவர் ரமேஷ் ஆகியோர் உடன் இருந்தனர்.