மர்ம காய்ச்சல் எதிரொலி: பழனி பகுதியில் கலெக்டர் திடீர் ஆய்வு

மர்ம காய்ச்சல் பரவி வருவதை தொடர்ந்து பழனி பகுதிகளில் கலெக்டர் திடீரென ஆய்வு செய்தார்.

Update: 2017-07-04 22:30 GMT

பழனி,

பழனி மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் மர்ம காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது. இதுவரை மர்மகாய்ச்சல் பாதிக்கப்பட்டு 15–க்கும் மேற்பட்டவர்கள் இறந்துள்ளனர். சாக்கடை கால்வாய் முறையாக தூர்வாராமல் இருப்பது, சுகாதாரமற்ற குடிநீர் வினியோகம் ஆகியவற்றின் காரணமாகவே மர்ம காய்ச்சல் பரவுவதாக கூறப்படுகிறது.

இதையொட்டி சுகாதாரத்துறையினர் முகாமிட்டு நோய் தடுப்பு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர். மர்ம காய்ச்சலால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் கொசு புகை மருந்து அடித்தல், அபேட் மருந்து தெளித்தல் உள்ளிட்ட பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் பொதுமக்களுக்கு சிகிச்சை அளித்து வருகின்றனர்.

இந்தநிலையில் நேற்று மாவட்ட கலெக்டர் டி.ஜி.வினய் பழனி பகுதிகளில் திடீரென ஆய்வு செய்தார். பழனி, சிவகிரிப்பட்டி, பாலாறு–பொருந்தலாறு அணை, குதிரையாறு அணை மற்றும் நகராட்சி குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் ஆகிய பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டார். மேலும் சிவகிரிப்பட்டி ஊராட்சி மன்ற அலுவலகத்தையும், அங்குள்ள குடிநீர் தொட்டியையும் பார்வையிட்டார். பின்னர் தொட்டியை சுத்தமாக வைத்து கொள்ள அறிவுறுத்தினார்.

பின்னர் மலைக்கோவிலுக்கு செல்லும் வழியில் உள்ள இடும்பன்மலை அருகே கொட்டுப்பட்டுள்ள பிளாஸ்டிக் பொருட்கள், குப்பைகளை அகற்றவும் உத்தரவிட்டார். அதேபோல் பாலாறு– பொருந்தலாறு அணையில் உள்ள நகராட்சி சுத்திகரிப்பு நிலையத்தை பார்வையிட்டு ஆய்வு செய்தார். அத்துடன் குடியிருப்பு பகுதிகளில் பொதுமக்கள் பிடித்து வைத்துள்ள தண்ணீர் சுத்தமாக இருக்கிறதா? என்று ஆய்வு செய்தார்.

பின்னர் அவர் நிருபர்களிடம் கூறுகையில், ‘பழனி பகுதியில், மர்மகாய்ச்சல் பரவி வருவதால், குடிநீரில் குளோரின் கலந்து வினியோகம் செய்ய வேண்டும். காய்ச்சல் வந்தால் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு சென்று உடனே பரிசோதித்து கொள்ள வேண்டும். சாதாரண காய்ச்சல் என்று நினைத்து சிகிச்சை பெறாமல் இருக்க வேண்டாம். பொதுமக்கள் காய்ச்சிய நீரை பருக வேண்டும். சுற்றுப்புறங்களை சுத்தமாக வைக்க பொதுமக்கள் ஒத்துழைக்க வேண்டும்’ என்றார்.

ஆய்வின் போது பழனி தாசில்தார் ராஜேந்திரன், சுகாதார நகர்நல அலுவலர் விஜய்சந்திரன் மற்றும் அதிகாரிகள் உடன் இருந்தனர்.

மேலும் செய்திகள்