தமிழகத்தில் 2 ஆண்டுகளாக ஆட்சியே நடக்கவில்லை: எச்.ராஜா

‘தமிழகத்தில் கடந்த 2 ஆண்டுகளாக ஆட்சியே நடக்கவில்லை‘ என்று பா.ஜனதா தேசிய செயலாளர் எச்.ராஜா குற்றம்சாட்டியுள்ளார்.

Update: 2017-07-04 22:45 GMT

பழனி,

பாரதீய ஜனதா கட்சி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் பழனியில் நடந்தது. இதற்கு மாவட்ட தலைவர் பழனிச்சாமி தலைமை தாங்கினார். கூட்டத்தில் பா.ஜனதா தேசிய செயலாளர் எச்.ராஜா சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேசினார்.

விவசாய அணி தேசிய குழு உறுப்பினர் வக்கீல் திருமலைச்சாமி, நகர தலைவர் செந்தில், மாவட்ட பொதுச்செயலாளர் கனகராஜ், மாவட்ட துணைத்தலைவர் கருப்புச்சாமி உள்பட பலர் கலந்து கொண்டனர். முன்னதாக எச்.ராஜா நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:–

பழனி அருகே சரக்கு வாகனத்தில் ஏற்றி சென்ற கன்றுக்குட்டிகளை மடக்கி பிடித்து போலீஸ் நிலையத்தில் மடாதிபதி சம்பத்குமார ஜீயர் ஒப்படைத்தது சரிதான். இதையொட்டி நடந்த கலவரத்தில் ஈடுபட்ட குற்றவாளிகளை போலீசார் கைது செய்ய வேண்டும்.

தமிழகத்தை இந்தியாவில் இருந்து பிரிப்பதற்காக நான் செயலாற்றி கொண்டு இருப்பேன் என்று கூறிய கூடங்குளம் அணு உலை எதிர்ப்பு போராட்ட குழு ஒருங்கிணைப்பாளர் உதயக்குமாரை தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்யவேண்டும். கதிராமங்கலத்தில் போலீசார் சட்டப்படியான நடவடிக்கை எடுக்கவேண்டும்.

ஜி.எஸ்.டி. பற்றி தவறான கருத்து பரவி வருகிறது. இதனை கூடுதல் வரி என்று நினைக்கிறார்கள். ஆனால் எல்லா வரிகளையும் உள்ளடக்கிய ஒரே வரி தான். இது புதுவரி அல்ல, கூடுதல் சுமையும் அல்ல.

தமிழகத்தில் கடந்த 2 ஆண்டுகளாக ஆட்சியே நடைபெறவில்லை. இதுபற்றி சொல்வதற்கு எதுவும் இல்லை. நடிகர் ரஜினிகாந்த், தான் அரசியலுக்கு வருவது பற்றி இதுவரை தெரிவிக்கவில்லை. அவர் வரும் போது தான் இது பற்றி கருத்து கூறமுடியும். அவர், ஆண்டவன் முடிவு செய்வார் என்று கூறுகிறார். ஜனாதிபதி தேர்தலில் பா.ஜனதா வேட்பாளர் ராம்நாத் கோவிந்த் வெற்றி பெறுவார்.

கடந்த நவம்பர் மாதம் 8–ந்தேதியில் இருந்து டிசம்பர் மாதம் வரை வங்கிகளில் முறைகேடாக பணம் போட்டிருந்த 3 லட்சம் நிறுவனங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளது. ரூ.3 லட்சம் கோடி கருப்பு பணம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

பாரதீய ஜனதா ஆட்சிக்கு வரும்போது 4.5 சதவீதமாக இருந்த நாட்டின் பொருளாதார வளர்ச்சி தற்போது 7.1 சதவீதமாக உயர்ந்துள்ளது. ஸ்பெக்ட்ரம் வழக்கில் வருகிற 15–ந்தேதி தீர்ப்பு வருகிறது. இதில் தொடர்புடைய ஆ.ராசா, கனிமொழி ஆகியோர் ஜெயிலுக்கு செல்வார்கள்.

இவ்வாறு எச்.ராஜா கூறினார்.

மேலும் செய்திகள்