கோவை கிறிஸ்தவ ஆலய வளாகத்தில் இறந்தது கிடந்த சிறுத்தைப்புலி

கோவை மதுக்கரை மலையடிவாரத்தில் கிறிஸ்தவ ஆலய வளாகத்தில் வாயில் நுரை தள்ளியபடி சிறுத்தைப்புலி கிடந்தது. அதற்கு வனத்துறையினர் சிகிச்சை அளித்தும் பலனின்றி பரிதாபமாக இறந்தது.

Update: 2017-07-04 22:00 GMT

போத்தனூர்,

கோவை அருகே உள்ள மதுக்கரை வனப்பகுதியில் புலிகள், சிறுத்தைப்புலிகள், யானைகள், மான்கள் உள்பட ஏராளமான வனவிலங்குகள் உள்ளன. அந்த வனவிலங்குகள் அடிக்கடி மலையடிவார கிராமத் துக்குள் புகுந்து அட்டகாசம் செய்து வருகிறது.

இந்த நிலையில், மதுக்கரை வனப்பகுதியில் இருந்து நேற்று மாலை 4 மணியளவில் ஒரு சிறுத்தைப்புலி வெளியே வந்தது. அது அங்குள்ள அய்யப்பன்கோவில் வீதியில் இருக்கும் கிறிஸ்தவ ஆலய வளாகத்துக்குள் புகுந்தது.

மிகவும் சோர்வுடன் காணப்பட்ட அந்த சிறுத்தைப்புலி, கிறிஸ்தவ ஆலய வளாக சுற்றுச்சுவரை தாண்டி குதிக்க முயன்றது. ஆனால் முடிய வில்லை. எனவே சுற்றுச்சுவரின் அருகிலேயே சிறுத்தைப்புலி படுத்துக்கொண்டது.

அப்போது அந்த ஆலயத்துக்கு சென்ற பெண் ஒருவர் அங்கு சிறுத்தைப்புலி படுத்துக்கிடப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். உடனே அவர் அலறியடித்தபடி ஆலய வளாகத்தை விட்டு வெளியே ஓடி வந்தார். இதை அறிந்த அந்தப்பகுதி மக்கள் விரைந்து வந்து சிறுத்தைப்புலி படுத்துக்கிடப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.

இது குறித்த தகவலின் பேரில் மண்டல வனப்பாதுகாவலர் ராமசுப்பிரமணியம், வனச்சரக அதிகாரி தினேஷ்குமார் மற்றும் வனத்துறையினர், வேட்டைத்தடுப்பு காவலர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். மேலும் கோவை மாவட்ட கலெக்டர் ஹரிகரனும் அங்கு சென்றார்.

இதையடுத்து வனத்துறையினர், வாயில் நுரை தள்ளிய நிலையில் கிடந்த சிறுத்தைப்புலியின் அருகே சென்றனர். ஆனால் சிறுத்தைப்புலி எதுவும் செய்யாமல் அப்படியே படுத்து கிடந்தது. எனவே மிகவும் சோர்வாக இருந்ததால் அதன் மீது வனத்துறையினர் தண்ணீரை ஊற்றி முதலுதவி சிகிச்சை அளித்தனர். அதன்பிறகும் சிறுத்தைப்புலி எழுந்திருக்க வில்லை.

சிறுத்தைப்புலியின் உடலில் சில இடங்களில் காயங்கள் இருந்தன. எனவே அதை மதுக்கரை ராணுவ துப்பாக்கி சுடும் தளமான மட்டத்துக்காடு வனப்பகுதிக்கு கொண்டு சென்று சிகிச்சை அளித்து, வனப்பகுதிக்குள் விட வனத்துறையினர் முடிவு செய்தனர்.

அதைத்தொடர்ந்து வனத்துறையினர் சிறுத்தைப்புலியை காரில் ஏற்றி, மட்டத்துக்காடு வனப்பகுதிக்கு கொண்டு சென்றனர். அங்கு வனத்துறையினர் மற்றும் கால்நடை மருத்துவர் மனோகரன், சிறுத்தைப்புலிக்கு சிகிச்சை அளித்தார். ஆனால் அந்த சிறுத்தைப்புலி சிகிச்சை பலனின்றி சிறிது நேரத்திலேயே பரிதாபமாக இறந்தது. இதையடுத்து வனத்துறையினர் அந்த சிறுத்தைப்புலியின் உடற்கூறுகளை பரிசோதனைக்காக எடுத்தனர். பின்னர் அந்த சிறுத்தைப்புலியை வனப்பகுதியில் தீ வைத்து எரித்தனர்.

இது குறித்து வனத்துறை அதிகாரிகள் கூறியதாவது:–

இறந்து போனது 5 வயதான ஆண் சிறுத்தைப்புலி ஆகும். மிகவும் சோர்வாக இருந்ததால் அதற்கு சத்து மருந்துகள் கொடுக்கப்பட்டன. ஆனாலும் சோர்வாகவே இருந்தது. வனப்பகுதியை விட்டு வெளியே வந்த போது, உயரமான இடத்தில் இருந்து தவறி விழுந்ததால் சிறுத்தைப்புலிக்கு உடலில் காயங்கள் ஏற்பட்டதா? அல்லது மற்ற வன விலங்குகளுடன் மோதியதால் காயங்கள் ஏற்பட்டதா? என்பது தெரிய வில்லை.

ஆனால் கிறிஸ்தவ ஆலய வளாக சுற்றுச்சுவர் அருகே, வாயில் நுரை தள்ளியபடி கிடந்ததால், உடல் நலக்குறைவு ஏற்பட்டு இறந்து இருக்கவும் வாய்ப்பு உள்ளது. ஆனாலும் சிறுத்தைப்புலி இறந்ததற்கான உண்மையான காரணத்தை கண்டறிவதற்காக அதன் உடலில் இருந்து எடுக்கப்பட்ட உடற்கூறுகள் பரிசோதனைக்காக ஆய்வகத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டு உள்ளது. இவ்வாறு அவர்கள் கூறினர்.

மேலும் செய்திகள்