10 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்றக்கோரி அரசு பணியாளர்கள் சென்னையில் கோட்டையை நோக்கி பேரணி

10 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்றக்கோரி 1 லட்சம் அரசு பணியாளர்கள் சென்னையில் கோட்டையை நோக்கி பேரணி செல்ல இருப்பதாக சங்கத்தின் சிறப்பு தலைவர் கூறினார்.

Update: 2017-07-04 22:45 GMT
திருச்சி,

தமிழக அரசு ஊழியர் களுக்கு 8-வது ஊதிய மாற்றத்துக்காக நியமிக்கப்பட்ட குழு அதன் அறிக்கையை சமர்ப்பிக்க மேலும் 3 மாத காலம் அவகாசம் அளிக்கப்பட்டு உள்ளது. 30-9-2017 வரை அவகாசம் வழங்கப்பட்டு இருப்பதால் 25 சத வீதம் இடைக்கால நிவாரணம் வழங்கவேண்டும். மேற்கு வங்காளம், திரிபுரா ஆகிய மாநிலங்களில் புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து விட்டு பழைய ஓய் வூதிய திட்டத்தை அமல் படுத்தி இருக்கிறார்கள். தமிழக அரசும் இதுபோன்ற கொள்கை முடிவை அறிவிக்கவேண்டும்.

பல்வேறு துறையில் நிரந்தரமற்ற ஊதியம் பெற்று வரும் தொழிலாளர்களுக்கு குறைந்த பட்ச மாத ஊதியத்தை ரூ.18 ஆயிரமாக வழங்கவேண்டும், வெளி ஆட்கள் மூலம் அரசு பணிகள் செய்வதற்கு தடை விதிக்கவேண்டும், இவர்களுக்கான ஊதியத்தை ஏஜெண்டுகளிடம் வழங்காமல் நேரடியாக கொடுக்கவேண்டும். ரேஷன் கடை பணியாளர்களுக்கு ஓய்வூதியம் வழங்கவேண்டும், டாஸ்மாக் மதுபான கடைகள் மூடப்பட்டதால் வேலை இழந்த பணியாளர்களுக்கு காலியாக உள்ள அரசு பணிகளை வழங்கவேண்டும். சாலைப்பணியாளர்களின் 41 மாத பணி நீக்க காலத்திற்குரிய ஊதியத்தை வழங்கவேண்டும், அரசு அலுவலகங்களில் கணினி தொடர்பான பணிகளை செய்பவர்களை அரசு தேர்வாணையம் மூலம் தேர்ந்தெடுத்து நிரந்தர பணி வழங்கவேண்டும் என்பன உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி பல ஆண்டுகளாக போராடி வருகிறோம்.

இந்த கோரிக்கைகளை நிறைவேற்றக்கோரி வருகிற 27-ந்தேதி அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் கலெக்டர் அலுவலகங்கள் முன் காலை 10 மணி முதல் பகல் 1 மணி வரை அல்லது மாலை 3 மணி முதல் 6 மணி வரை அரை நாள் தர்ணா போராட்டம் தமிழ்நாடு அரசு பணியாளர் சங்கம் சார்பில் நடத்தப்பட இருக்கிறது. 11-8-2017 அன்று சென்னையில் கோட்டையை நோக்கி ஒரு லட்சம் அரசு பணியாளர்களை திரட்டி பேரணி செல்ல இருக்கிறோம். பேரணி முடிவில் முதல்-அமைச்சரை சந்தித்து மனு கொடுப்போம்.

தமிழகத்தின் அனைத்து அரசு துறைகளிலும் சுமார் 5 லட்சம் பணியிடங்கள் காலியாக உள்ளன. இதனால் அரசு பணிகள், மக்கள் சேவை பாதிக்கப் படுகிறது. இதனை கருத்தில்கொண்டு காலி பணியிடங்களை நிரப்பக்கோரி கோர்ட்டில் வழக்கு தொடரவும் திட்டமிட்டு இருக்கிறோம்.

மேலும் செய்திகள்