கம்பம்மெட்டு பகுதியில் எல்லை கற்களை மீண்டும் நட்டு வைத்த பார்வர்டு பிளாக் கட்சியினர் கைது

கம்பம்மெட்டு பகுதியில் எல்லை கற்களை மீண்டும் நட்டு வைத்து போராட்டத்தில் ஈடுபட்ட பார்வர்டு பிளாக் கட்சியினரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2017-07-04 22:30 GMT

கம்பம்,

தேனி மாவட்டத்தில் கம்பம்மெட்டு பகுதி தமிழக– கேரள எல்லையில் அமைந்துள்ளது. இந்த பகுதியில் கடந்த சில தினங்களுக்கு முன்பு இரு மாநில அதிகாரிகளும் இணைந்து நில அளவீடு செய்யும் பணியில் ஈடுபட்டனர். அப்போது மந்திப்பாறை நாவல்பள்ளம் என்னுமிடத்தில் இருந்து கல்லுவேலி எஸ்டேட் வரை 14 எல்லை கற்களை நட்டனர்.

இதனை தொடர்ந்து கேரள மந்திரி எம்.எம்.மணி, இடுக்கி தொகுதி எம்.பி ஜோய்ஸ் ஜார்ஜ், முன்னாள் முதல் மந்திரி உம்மன்சாண்டி மற்றும் கேரளாவை சேர்ந்த அரசியல் கட்சியினர் அங்கு நேரில் சென்று பார்வையிட்டனர். அவர்கள் கம்பம்மெட்டுவில் ஆக்கிரமிப்பு செய்துள்ள கேரள மாநில மக்களுக்கு ஆதரவாக பேசினர். மேலும் அவர்கள் எல்லை கற்களை அகற்றியதாக கூறப்படுகிறது. இது சம்பந்தமாக தமிழக அரசின் சார்பில் எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கவில்லை.

இந்த நிலையில் நேற்று, எல்லை கற்களை அகற்றியதை கண்டித்து தென்னிந்திய பார்வர்டு பிளாக் கட்சி சார்பில் மாவட்ட பொதுச்செயலாளர் சக்கரவர்த்தி தலைமையில் கட்சி நிர்வாகிகள் கம்பம்மெட்டு அடிவாரத்தில் சாலை மறியலில் ஈடுபட்டனர். அப்போது கேரளாவுக்கு காய்கறிகள் மற்றும் தொழிலாளர்களை வேலைக்கு ஏற்றி செல்லும் வாகனங்களை செல்லவிடாமல் தடுத்தனர். இதனால் அங்கு போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதுகுறித்து தகவலறிந்த போலீசார் அங்கு விரைந்து வந்து அவர்களை கைது செய்தனர். பின்னர் அவர்கள் தனியார் திருமண மண்டபத்தில் அடைத்து வைக்கப்பட்டனர்.

இதற்கிடையே நிர்வாகிகள் மற்றும் கட்சியினர் மண்டபத்தில் இருந்து வெளியேறி கம்பம்மெட்டு பகுதிக்கு சென்றனர். அங்கு எல்லை கற்களை மீண்டும் நட்டு வைத்து அங்கு அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது எல்லை கற்களை அகற்றியவர்களை தமிழக போலீசார் கைது செய்யவேண்டும். மத்திய அரசு தமிழக– கேரள எல்லையில் நில அளவீடு செய்யவேண்டும் என்று வலியுறுத்தி அவர்கள் கோ‌ஷமிட்டனர். இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

இதையடுத்து கேரள போலீசார் அங்கு விரைந்து வந்தனர். தகவலறிந்த உத்தமபாளையம் போலீஸ் துணை சூப்பிரண்டு அண்ணாமலை தலைமையில் ஏராளமான போலீசார் கம்பம்மெட்டுக்கு வந்து போராட்டத்தில் ஈடுபட்ட 48 பேர்களை கைது செய்தனர். பின்னர் அவர்களை வேனில் ஏற்றி ராயப்பன்பட்டி போலீஸ் நிலையத்துக்கு கொண்டு சென்றனர்.

மேலும் கம்பம்மெட்டு சோதனைச்சாவடியில் போலீசார் குவிக்கப்பட்டு தொடர்ந்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் அங்கு பதற்றமான சூழ்நிலை நிலவுகிறது.

இதே போல் கூடலூரில் குமுளி தேசிய நெடுஞ்சாலையில் அரசு மருத்துவமனை முன்பு அனைத்து விவசாயிகள் சங்க மாநில செயலாளர் செங்குட்டுவன் தலைமையில் மறியலில் ஈடுபட்டனர். அப்போது கம்பம்மெட்டு பகுதியில் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ள பகுதியை மீட்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும். பிரச்சினைக்குரிய இடங்களை தமிழக அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள், எம்.பி.க்கள் வந்து பார்வையிடாததை கண்டித்தும் கோ‌ஷமிட்டனர். இதனால் அங்கு சுமார் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

இதுகுறித்து தகவலறிந்த கம்பம் தெற்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) கண்ணன், சப்–இன்ஸ்பெக்டர் லாவண்யா மற்றும் போலீசார் அங்கு விரைந்து சென்றனர். மறியலில் ஈடுபட்ட 20 பேரை கைது செய்து வேனில் ஏற்றினர். பின்னர் அவர்கள் கூடலூரில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் அடைக்கப்பட்டனர். இதே போல் அந்த பகுதியில் மறியலில் ஈடுபட்ட தென்னிந்திய பார்வர்டு பிளாக் கட்சியின் நகர செயலாளர் ராஜீவ் தலைமையில் 5 பேரை போலீசார் கைது செய்தனர்.

மேலும் செய்திகள்