குருவாயூர் எக்ஸ்பிரஸ் ரெயிலில் உணவுப்பொருட்கள் விற்பனை செய்ய ஊழியர்கள் மறுப்பு

குருவாயூர் எக்ஸ்பிரஸ் ரெயிலில் உணவுப்பொருட்கள் விற்பனை செய்ய ஊழியர்கள் மறுப்பு ஜி.எஸ்.டி.யால் பயணிகள் அவதி

Update: 2017-07-04 22:45 GMT

மதுரை,

குருவாயூரில் இருந்து மதுரை வழியாக சென்னைக்கு தினசரி எக்ஸ்பிரஸ் ரெயில் இயக்கப்படுகிறது. இந்த ரெயில் மதுரை ரெயில்நிலையத்துக்கு தினமும் காலை 11 மணிக்கு வந்து சேர்கிறது. இந்த ரெயில் இரவு 8.35 மணிக்கு சென்னை எழும்பூர் ரெயில்நிலையம் சென்றடைகிறது. பொதுவாக பகல் நேர ரெயில்களில் ரெயிலுக்குள்ளேயே சாப்பாடு உள்ளிட்ட உணவுப்பொருட்கள் தயாரித்து பயணிகளுக்கு விற்பனை செய்யப்பட்டு வந்தது.

இதற்கிடையே, கடந்த 2 வருடங்களுக்கும் மேலாக குருவாயூர் எக்ஸ்பிரஸ் ரெயிலில் உணவு தயாரிக்கும் பெட்டி இணைக்கப்படாமல் இயக்கப்படுகிறது. இதனால் இந்த ரெயிலில் தென்மாவட்டங்களில் இருந்து சென்னை செல்லும் மற்றும் சென்னையில் இருந்து தென்மாவட்டங்களுக்கு வரும் பயணிகள் கடும் அவதிக்கு ஆளாகி வருகின்றனர்.

இந்த ரெயிலில் மணியாச்சி ரெயில்நிலையத்தில் இருந்து தூத்துக்குடியில் இருந்து 6 பெட்டிகள் இணைக்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இதனால், ரெயில் செல்லும் வழித்தடத்தில் உள்ள ரெயில்நிலையங்களின் பிளாட்பாரங்களில் கடைகள் வைத்திருப்பவர்கள் தங்களது ஊழியர்கள் மூலம் உணவுப்பொட்டலங்கள், வடை, டீ, தண்ணீர் பாட்டில் ஆகியவற்றை விற்பனை செய்து வருகின்றனர். ஆனால், இந்த உணவுப்பொருட்கள் அனைத்து பெட்டிகளிலும் உள்ள பயணிகளுக்கு கிடைப்பதில்லை.

ஒரு சில பயணிகள் ரெயில்நிலையங்களில் ரெயில் நிற்கும் போது, இறங்கி பிளாட்பாரங்களில் உள்ள கடைகளில் உணவுப்பொருட்களை வாங்குகின்றனர். இதனால் பல்வேறு சமயங்களில் ரெயிலை தவறவிடும் சம்பவங்களும் அரங்கேறி வருகிறது. இந்த நிலையில், நேற்று காலை மதுரை ரெயில்நிலையம் வந்த குருவாயூர் எக்ஸ்பிரஸ் ரெயிலில்(வ.எண்.16128) உணவுப்பொருள்களை விற்பனை செய்யும் வியாபாரிகள் உணவுப்பொட்டலங்களை விற்பனை செய்ய மறுத்து விட்டதாக கூறப்படுகிறது.

ரெயில் பெட்டிக்குள் உணவுப்பொருட்களை விற்பனை செய்யும் போது, உணவுப்பொருளின் விலையில் இருந்து குறிப்பிட்ட தொகை அந்த ஊழியர்களுக்கு கமி‌ஷனாக வழங்கப்படுகிறது. தற்போது ஜி.எஸ்.டி. வரி விதிப்பால் உணவுப்பொருள்களின் விலைக்கு மட்டுமே கமி‌ஷன் தரப்படும் என்றும், ஜி.எஸ்.டி. தொகையாக வசூலிக்கப்படும் கூடுதல் பணத்துக்கு கமி‌ஷன் வழங்கமுடியாது என்றும் கடை வைத்திருப்பவர்கள் தெரிவித்து விட்டதாக கூறப்படுகிறது.

ஆனால், ஜி.எஸ்.டி. தொகைக்கும் சேர்த்து கமி‌ஷன் வழங்க வேண்டும் என்று வலியுறுத்தி ஊழியர்கள் யாரும் குருவாயூர் எக்ஸ்பிரஸ் ரெயிலில் உணவுப்பொருட்கள் விற்பனை செய்யவில்லை என்று கூறப்படுகிறது. இந்த பிரச்சினையால் நேற்று குருவாயூர் எக்ஸ்பிரஸ் ரெயிலில் பயணம் செய்த வயதான, பெண் பயணிகள், குழந்தைகள் ஆகியோர் கடும் அவதிக்கு ஆளாயினர்.

மேலும் செய்திகள்