தானே - வசாய் சாலையில் கியாஸ் டேங்கர் லாரி கவிழ்ந்து விபத்து போக்குவரத்து கடும் பாதிப்பு

தானே - வசாய் சாலையில் கியாஸ் டேங்கர் லாரி கவிழ்ந்து விபத்து ஏற்பட்டது. இதன் காரணமாக போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது.

Update: 2017-07-03 23:30 GMT
வசாய்,

தானே - வசாய் சாலையில் நேற்று மதியம் 1 மணியளவில் டேங்கர் லாரி ஒன்று சென்று கொண்டிருந்தது. கோட்பந்தர் காஜூபாடா பகுதியில் வந்த போது திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து அந்த டேங்கர் லாரி நடுரோட்டில் கவிழ்ந்து விபத்துக்கு உள்ளானது.

அப்போது டேங்கர் சேதம் அடைந்து அதில் இருந்து கியாஸ் வெள்ளை நிறத்தில் பீறிட்டு வெளியேறியது. அதிர்ஷ்டவசமாக இந்த விபத்தில் டிரைவர் மற்றும் கிளனர் உயிர் தப்பினர்.

தீ விபத்து ஏற்படாமல் இருக்க...

இருப்பினும் விபத்தின் காரணமாக பயந்து போன அவர்கள் அங்கிருந்து தப்பி ஓடி விட்டனர். கியாஸ் வெளியேறியதால் அந்த பகுதியை சேர்ந்தவர்களும் பயத்தில் ஓட்டம் பிடித்தனர். தகவல் அறிந்து போலீசார் மற்றும் தீயணைப்பு படையினர் விரைந்து வந்தனர்.

உடனடியாக அந்த சாலையில் வாகன போக்குவரத்துக்கு தடை விதிக்கப்பட்டது.

தீயணைப்பு படையினர் வெளியேறிய கியாசின் தீவிரத்தன்மையை கட்டுப்படுத்தும் வகையில் ரசாயனம் கலந்த தண்ணீரை பீய்ச்சி அடித்தனர். மேலும் கியாஸ் கசிவால் தீ விபத்து ஏற்படாமல் இருப்பதற்கான நடவடிக்கைகளையும் மேற்கொண்டனர்.

போக்குவரத்து பாதிப்பு

இருப்பினும் மாலை 5 மணி வரையிலும் அந்த டேங்கர் லாரி அப்புறப்படுத்தப்படவில்லை. இந்த விபத்தின் காரணமாக சாலையின் இரு மார்க்கத்திலும் ஒரு கி.மீ. தூரம் வரையிலும் போக்குவரத்துக்கு தடை செய்யப்பட்டன. இதனால் வாகனங்கள் பல கி.மீ. தூரத்திற்கு அணிவகுத்து நின்றன. வாகன ஓட்டிகள் கடும் சிரமம் அடைந்தனர். 

மேலும் செய்திகள்