டோம்பிவிலியில் கடையில் புகுந்து ரூ.2 லட்சம் செல்போன், பணம் கொள்ளை 3 பேருக்கு வலைவீச்சு

டோம்பிவிலியில் கடையில் புகுந்து ரூ.2 லட்சம் செல்போன், பணம் கொள்ளையடித்த 3 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

Update: 2017-07-03 22:45 GMT
மும்பை,

தானே மாவட்டம் டோம்பிவிலி, மான்பாடா பகுதியில் செல்போன் கடை நடத்தி வருபவர் திருபாட்டி. இவர் நேற்று முன்தினம் இரவு 10 மணியளவில் கடையை அடைத்து விட்டு வீட்டிற்கு சென்று விட்டார். நேற்று காலையில் கடையை திறக்க வந்த போது கடையின் ஷட்டர் உடைக்கபட்டு திறந்து கிடந்தது.

இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த அவர் கடைக்குள் சென்று பார்த்தார். அப்போது கடையில் இருந்த செல்போன்கள் கொள்ளை போயிருந்தன. பணமும் காணாமல் போயிருந்தது. யாரோ மர்மஆசாமிகள் கடைக்குள் புகுந்து கொள்ளையடித்து சென்றது தெரியவந்தது. கொள்ளை போன செல்போன், பணத்தின் மதிப்பு ரூ.2 லட்சம் ஆகும். இதுபற்றி திருபாட்டி மான்பாடா போலீசில் புகார் கொடுத்தார்.

3 பேருக்கு வலைவீச்சு

இதன்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினார்கள்.

மேலும் கடையில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவாகியிருந்த காட்சிகளை பார்வையிட்டனர். அப்போது அதிகாலை 4.20 மணியளவில் கடையின் ஷட்டரை உடைத்து புகுந்த 3 ஆசாமிகள் கடையில் இருந்த செல்போன் மற்றும் பணத்தை அள்ளி சென்ற காட்சி பதிவாகி இருந்தது.

கொள்ளையர்கள் தாங்கள் அடையாளம் தெரியாமல் இருப்பதற்காக ரெயின்கோட் அணிந்து முகத்தை மூடியபடி உள்ளே புகுந்து இருந்தனர்.

சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து கொள்ளையர்களை வலைவீசி தேடி வருகின்றனர். 

மேலும் செய்திகள்