மத்திய பா.ஜனதா ஆட்சியால் ஜனநாயகத்திற்கு ஆபத்து சித்தராமையா பேச்சு

மத்தியில் ஆளும் பா.ஜனதா ஆட்சியால் ஜனநாயகத்திற்கு ஆபத்து ஏற்பட்டு உள்ளதாக முதல்-மந்திரி சித்தராமையா கூறியுள்ளார்.

Update: 2017-07-03 21:28 GMT
ஹாசன்,

ஹாசன் டவுனில் உள்ள தனியார் கல்லூரியில் நேற்று ஹாசன், மைசூரு, சிக்கமகளூரு, மண்டியா, சாம்ராஜ்நகர் ஆகிய 5 மாவட்ட காங்கிரஸ் நிர்வாகிகளின் ஆலோசனை கூட்டம் நடந்தது. இதில் கலந்துகொண்ட முதல்- மந்திரி சித்தராமையா கட்சி நிர்வாகிகள் மத்தியில் பேசியதாவது:-

ஹாசன் மாவட்டத்திற்கு கடந்த 1½ ஆண்டுகளில் 4 முறை வந்து உள்ளேன். இங்கு 7 சட்டமன்ற தொகுதிகளும், ஒரு பாராளுமன்ற தொகுதியும் உள்ளது. ஜனதா தளம் (எஸ்) கட்சியின் கோட்டை என அழைக்கப்படும் இந்த மாவட்டத்தில் காங்கிரஸ் கட்சிக்கு 4 எம்.எல்.ஏ.க்கள் மற்றும் ஒரு எம்.பி. உள்ளனர். மத்தியில் ஆளும் பா.ஜனதா கட்சி பொய்களை கூறி மக்களை ஏமாற்றி வருகிறது. கடந்த பாராளுமன்ற தேர்தலின் போது மோடி வெளிநாட்டில் உள்ள கருப்பு பணத்தை இங்கு கொண்டு வந்து ஏழைகளுக்கு தருவதாக கூறினார்.

4-ம் தர அரசியல்

மேலும் பா.ஜனதா கட்சி ஆட்சிக்கு வந்தால் 2 கோடி பேருக்கு புதிதாக வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும் என்று கூறப்பட்டது. ஆனால் கடந்த 3½ ஆண்டுகளில் வெறும் 4 லட்சம் வேலைவாய்ப்புகளை மத்திய அரசு உருவாக்கி உள்ளது. பா.ஜனதா கட்சியின் மாநில தலைவர் எடியூரப்பா தற்போது அனைத்து மாவட்டங்களிலும் சுற்றுப்பயணம் மேற்கொண்டுவருகிறார். அப்போது ஆதிதிராவிட மக்களின் வீடுகளுக்கு சென்று உணவு சாப்பிட்டு வருகிறார்.

உண்மையிலேயே பா.ஜனதா கட்சியினருக்கு ஆதிதிராவிட மக்கள் மீது அக்கறை இருந்தால், அவர்களது கட்சியில் உள்ள உயர் சாதியினரை ஆதிதிராவிட, பிற்படுத்தப்பட்ட மக்களின் வீடுகளின் சென்று முதலில் சம்பந்தம் செய்யட்டும். அப்போது அந்த கட்சியின் உண்மை முகம் மக்களுக்கு தெரியவரும். எடியூரப்பா ஓட்டு அரசியலுக்காக இப்படிப்பட்ட 4-ம் தரமான அரசியலை தற்போது செய்து வருகிறார்.

ஜனநாயகத்திற்கு ஆபத்து

நான் மத்திய அரசுக்கு எதிரானவன் அல்ல. மத்திய அரசு தற்போது கொண்டு வந்துள்ள சரக்கு, சேவை வரியை நான் எதிர்க்கவில்லை. ஆனால் இந்த சரக்கு, சேவை வரி முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் தலைமையிலான காங்கிரஸ் அரசு கொண்டு வந்த திட்டம் ஆகும். அப்போது இதை எதிர்த்த மோடி, தற்போது இரவோடு, இரவாக சரக்கு, சேவை வரியை அறிமுகப் படுத்தி பேசுவது பா.ஜனதா கட்சிக்கும், மோடிக்கும் அவமானமாக இல்லையா?.

தற்போது மத்தியில் உள்ள பா.ஜனதா கட்சியால் ஜனநாயகத்திற்கு ஆபத்து ஏற்பட்டு உள்ளது. எனவே ஜனநாயகத்தை காப்பாற்ற வருகிற 2019-ம் ஆண்டு ராகுல் காந்தி தலைமையிலான காங்கிரஸ் கட்சி மத்தியில் அமையவேண்டும். அதற்கு நாம் அனைவரும் ஒன்றிணைந்து பாடுபட வேண்டும்.

சட்டசபை தேர்தல் முன்னோட்டம்

அதற்கு முன்னோட்டமாக அடுத்த ஆண்டு (2018) கர்நாடகத்தில் நடைபெற உள்ள சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் கட்சி வெற்றிபெற வேண்டும். அதற்காக காங்கிரஸ் கட்சியை பூத் அளவில் பலம் வாய்ந்த கட்சியாக மாற்றவேண்டும். மாநிலத்தில் பசியோடு யாரும் இருக்க கூடாது என்பதால் எனது தலைமையிலான அரசு அன்ன பாக்ய திட்டத்தை கொண்டு வந்து உள்ளது. இந்த திட்டத்தில் மாநிலத்தில் உள்ள 1 கோடியே 10 லட்சம் குடும்பங்களுக்கு இலவச அரிசி வழங்கப்பட்டு வருகிறது. இதுபோன்ற அரசின் நல்லதிட்டங்களை மக்களிடம் காங்கிரசார் விளக்கிக் கூற வேண்டும்.

இவ்வாறு சித்தராமையா பேசினார்.

கூட்டத்தில், மாநில காங்கிரஸ் தலைவர் பரமேஸ்வர், மந்திரிகள் மஞ்சு, யு.டி.காதர், டி.கே.சிவக்குமார், வேணுகோபால் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

மேலும் செய்திகள்