ரூ.25 ஆயிரம் லஞ்சம் வாங்கிய பி.யூ. கல்லூரி கல்வித்துறை இயக்குனர் கைது

தனியார் கல்லூரிக்கு மானியம் வழங்க ரூ.25 ஆயிரம் லஞ்சம் வாங்கிய பி.யூ.கல்லூரி கல்வித் துறை இயக்குனரை ஊழல் தடுப்பு படையினர் கைது செய்தனர்.;

Update: 2017-07-03 21:25 GMT
மைசூரு,

மைசூரு டவுனில் புதியதாக விஜசேத்தனா என்ற தனியார் கல்லூரி தொடங்கப்பட்டுள்ளது. இந்த கல்லூரியின் முதல்வர் சகுந்தலா, தனது கல்லூரிக்கு அரசின் மானியங்கள் வழங்கக் கோரி மைசூரு மாவட்ட பி.யூ.கல்லூரி கல்வித் துறை இயக்குனர் ஜெயப்பிரகாசிடம் விண்ணப்பித்துள்ளார்.

அப்போது ஜெயப்பிரகாஷ், தனக்கு ரூ.50 ஆயிரம் லஞ்சம் தந்தால் தான், மானியம் வழங்க அனுமதி வழங்குவேன் எனக் கூறியுள்ளார். இதனால் சகுந்தலா தலா ரூ.25 ஆயிரம் வீதம் 2 தவணையாக லஞ்சம் தருவதாக கூறியுள்ளார். இருப்பினும் லஞ்சம் கொடுக்க விரும்பாத சகுந்தலா இதுபற்றி மைசூரு ஊழல் தடுப்பு படையில் புகார் செய்தார்.

பி.யூ.கல்லூரி கல்வித்துறை இயக்குனர் கைது

இதைதொடர்ந்து அவருக்கு ஊழல் தடுப்பு படையினர் சில அறிவுரைகள் வழங்கினர். மேலும் ரசாயன பொடி தடவிய ரூ.25 ஆயிரத்தை கொடுத்து, அதனை பி.யூ. கல்லூரி கல்வித்துறை இயக்குனர் ஜெயப்பிரகாசிடம் கொடுக்கும்படி கூறினர். அதன்படி நேற்று காலை சகுந்தலா, பி.யூ.கல்லூரி கல்வித் துறை இயக்குனர் அலுவலகத்திற்கு சென்றுள்ளார்.

அங்கு வைத்து ஜெயப்பிரகாசிடம் ரசாயன பொடி தடவிய ரூ.25 ஆயிரத்தை சகுந்தலா கொடுத்தார். அப்போது அங்கு ஏற்கனவே மறைந்திருந்த ஊழல் தடுப்பு படையினர் ஜெயப்பிரகாசை கையும் ,களவுமாக பிடித்து கைது செய்தனர். அவரிடம் இருந்து ரூ.25 ஆயிரமும் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் இதற்கு உடந்தையாக இருந்த ஜெயப்பிரகாசின் கார் டிரைவரையும் ஊழல் தடுப்பு படையினர் கைது செய்தனர்.

இதுதொடர்பாக மைசூரு ஊழல் தடுப்பு படையினர் வழக்குப்பதிவு செய்து, கைதான 2 பேரிடமும் விசாரணை நடத்தி வருகிறார்கள். 

மேலும் செய்திகள்