அரசு பஸ்சை சிறைபிடித்து பொதுமக்கள் போராட்டம்

குருணிகுளத்துப்பட்டியில் அரசு பஸ்சை சிறைபிடித்து பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2017-07-03 22:45 GMT

தரகம்பட்டி,

அரவக்குறிச்சி பணிமனையில் இருந்து பள்ளப்பட்டி, தரகம்பட்டி, திருச்சி வழியாக அரசு பஸ் ஒன்று விழுப்புரம் வரை இயக்கப்பட்டது. இந்த பஸ் கடந்த சில நாட்களாக விழுப்புரம் செல்லாமல் திருச்சி வரை மட்டுமே சென்று வருகிறது. இதனால் அந்த வழித்தடத்தில் உள்ள பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனர். இதுகுறித்து குருணிகுளத்துப்பட்டி பொதுமக்கள் அரவக்குறிச்சி பணிமனை மேலாளரிடம் புகார் தெரிவித்தனர். அப்போது அவர் கூறுகையில், உயர் அதிகாரிகளின் உத்தரவின்படியே பஸ்சை இயக்க முடியும் என தெரிவித்தார்.

இதனால் ஆத்திரம் அடைந்த குருணிகுளத்துப்பட்டி பொதுமக்கள் நேற்று அந்த வழியாக சென்ற அரசு பஸ்சை சிறைபிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்த சிந்தாமணிப்பட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் ரவி மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது போலீசார் கூறுகையில், இதுகுறித்து கடவூர் தாலுகா அலுவலகத்தில் சம்மந்தப்பட்ட அலுவலர்களை வைத்து அமைதி பேச்சுவார்த்தை நடத்தி அதன் மூலம் தீர்வு காணப்படும் என உறுதி அளித்தனர். இதனை ஏற்றுக்கொண்ட பொதுமக்கள் சிறைபிடித்த அரசு பஸ்சை விடுவித்துவிட்டு கலைந்து சென்றனர்.

மேலும் செய்திகள்