டாஸ்மாக் கடைகளுக்கு எதிராக போராடும் பெண்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரிய மனு தள்ளுபடி

டாஸ்மாக் கடைகளுக்கு எதிராக போராடும் பெண்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரிய மனுவை தள்ளுபடி செய்து மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.;

Update: 2017-07-03 23:00 GMT

மதுரை,

மதுரையை சேர்ந்த கே.கே.ரமேஷ், மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது:–

டாஸ்மாக் கடைகளால் ஆண்டுதோறும் 30 ஆயிரம் கோடி ரூபாய் அரசுக்கு வருமானம் கிடைத்து வருகிறது. இந்தநிலையில் சுப்ரீம் கோர்ட்டு உத்தரவுபடி தேசிய நெடுஞ்சாலை ஓரங்களில் உள்ள மதுபானக்கடைகள் அகற்றப்பட்டு, வேறு பகுதிகளுக்கு இடமாற்றம் செய்யப்பட்டு வருகின்றன. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழகத்தின் பல மாவட்டங்களில் சில எதிர்க்கட்சி தலைவர்களின் தூண்டுதலின்பேரில் பெண்கள் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

பல இடங்களில் இடமாற்றம் செய்யப்பட்ட டாஸ்மாக் கடைகளை அடித்து நொறுக்கி, மதுபாட்டில்களை உடைத்து சேதப்படுத்தி வருகின்றனர். இதனால் ஆயிரக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள பொது சொத்துகள் சேதப்படுத்தப்பட்டுள்ளன.

எனவே பொதுச்சொத்துகளை பாதுகாக்கும் வகையில் டாஸ்மாக் கடைகளுக்கு எதிராக போராடும் பெண்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கடந்த மாதம் 3–ந்தேதி அரசு அதிகாரிகளுக்கு புகார் மனு அனுப்பினேன். ஆனால் எந்த நடவடிக்கையும் எடுத்ததாக தெரியவில்லை. எனது மனுவை பரிசீலித்து தகுந்த நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும்.

இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டிருந்தது.

ஏற்கனவே இந்த வழக்கு குறித்து தலைமைச்செயலாளர் உள்ளிட்ட அதிகாரிகளுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டிருந்தது.

இந்தநிலையில் இந்த மனு நீதிபதிகள் கே.கே.சசிதரன், ஜி.ஆர்.சுவாமிநாதன் ஆகியோர் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு வக்கீல் ஆஜராகி, ‘டாஸ்மாக் கடைகளை சேதப்படுத்துபவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது’ என்றார். அரசு தரப்பு வாதங்களை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள், இந்த மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.

மேலும் செய்திகள்