கோவில் அருகே டாஸ்மாக் கடைக்கு அனுமதி வழங்க கூடாது கிராம மக்கள் முறையீடு
டாஸ்மாக் கடை திறப்பதற்கு அனுமதி வழங்க கூடாது என வலியுறுத்தி கிராம மக்கள் கலெக்டரிடம் மனு கொடுத்தனர்.
விருதுநகர்,
கலெக்டர் சிவஞானத்திடம் சிவகாசி அருகேயுள்ள கொங்கலாபுரம் கிராமத்தை சேர்ந்தவர்கள் கொடுத்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:–
சிவகாசி அருகே மானகசேரி பஞ்சாயத்தில் உள்ள கொங்கலாபுரம் கிராமத்தில் பசும்பொன்நகரில் உள்ள குடியிருப்பு பகுதிக்கு மத்தியில் அரசு டாஸ்மாக் கடை திறக்க நடவடிக்கை எடுத்து வருவதாக கேள்விப்பட்டு கடந்த மாதம் சிவகாசி தாசில்தார், ஆர்.டி.ஒ. மற்றும் மாவட்ட நிர்வாகம் ஆகியோரிடம் நேரில் சென்று டாஸ்மாக் கடை திறப்பதற்கு ஆட்சேபனை தெரிவித்து மனு கொடுத்தோம். சிவகாசி தாசில்தார் மற்றும் அதிகாரிகள் டாஸ்மாக் கடை திறக்கப்படாது என உறுதி அளித்தனர். ஆனால் தற்போது இதற்கு மாறாக டாஸ்மாக் கடையை உடனடியாக திறப்பதற்கு மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளதாக அறிகிறோம்.
இந்த டாஸ்மாக் கடை அமைய உள்ள இடத்தின் அருகில் மாரியம்மன் கோவிலும், விநாயகர் கோவிலும் உள்ளது. மேலும் பொதுமக்கள் தண்ணீர் எடுக்கும் குடிநீர் தொட்டியும் உள்ளது. இந்த இடத்திற்கு அருகில் பட்டாசு ஆலை உள்ளதால் அங்கு பணிபுரியும் பெண்கள் இந்த வழியாகத்தான் செல்ல வேண்டும். இதனால் குடியிருப்பு பகுதிக்கு பாதிப்பு ஏற்படுவதுடன் சட்டம்–ஒழுங்கு பிரச்சினையும் ஏற்பட வாய்ப்பு உள்ளது.
எனவே இந்த பகுதியில் டாஸ்மாக் கடை திறப்பதற்கு அனுமதி வழங்கக் கூடாது. டாஸ்மாக் கடை திறந்தால் எங்கள் பகுதிக்கு பெரும் பாதிப்பு ஏற்படும். இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.