திருப்பூர் அருகே இரு தரப்பினர் இடையேமோதல்: 9 பேர் கைது; போலீஸ் குவிக்கப்பட்டதால் பரபரப்பு
திருப்பூர் அருகே இரு தரப்பினருக்கு இடையே ஏற்பட்ட மோதல் தொடர்பாக 9 பேர் கைது செய்யப்பட்டனர். ஒருவர் தலைமறைவாகி விட்டார். சம்பவஇடத்தில் போலீஸ் குவிக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
அனுப்பர்பாளையம்,
திருப்பூர் –அவினாசி ரோடு அம்மாபாளையத்தை அடுத்த ராக்கியாபாளையம் பாலாஜிநகர் பகுதியை சேர்ந்தவர் அகமது கபீர் (வயது 45). இவருடைய வீட்டின் அருகில் இவருக்கு சொந்தமான தோட்டம் உள்ளது. நேற்றுமுன்தினம் மாலை அதே பகுதியை சேர்ந்த தமிழரசன் (18), சந்தோஷ் (18) ஆகியோர் அகமது கபீரின் தோட்டத்திற்குள் சென்றுள்ளனர். அதே நேரத்தில் அங்கு சென்ற அகமது கபீர் தோட்டத்திற்குள் அத்துமீறி வந்ததாக கூறி தமிழரசன் மற்றும் சந்தோஷ் ஆகியோரை கண்டித்துள்ளார். அப்போது அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
இதையடுத்து தமிழரசனும், சந்தோசும் அங்கிருந்து சென்று விட்டனர். பின்னர் சிறிது நேரத்தில் தமிழரசன், சந்தோஷ் மற்றும் அவருடைய நண்பர்களான மனோஜ்குமார், ராஜேஷ், ஸ்ரீதர் ஆகியோர் அகமது கபீர் வீட்டிற்கு சென்றதாக கூறப்படுகிறது. அப்போது அங்கிருந்த அகமது கபீரின் மனைவியிடம் அவர்கள் தகராறில் ஈடுபட்டு தாக்கியதாக தெரிகிறது.
இதுகுறித்து தகவலறிந்து வீட்டிற்கு வந்த அகமது கபீரிடம் நடந்த சம்பவம் பற்றி அவருடைய மனைவி கூறி உள்ளார். இதனால் அகமது கபீர் மற்றும் அவருடைய நண்பர்களான ஷேக்பரீத், ஜெய்லானி, கிஷான்குமார், வைத்தீஸ்வரன் ஆகியோருடன் சேர்ந்து தமிழரசன், சந்தோஷ், மனோஜ்குமார், ராஜேஷ், ஸ்ரீதரை தாக்கியதாக கூறப்படுகிறது.
இந்த சம்பவம் தொடர்பாக இரு தரப்பினரும் தனித்தனியாக கொடுத்த புகாரின் பேரில் அனுப்பர்பாளையம் போலீசார் விசாரணை நடத்தினார்கள். மேலும் இரு தரப்பினரும் கொடுத்த புகார்களின் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்த போலீசார் தமிழரசன், சந்தோஷ், மனோஜ்குமார், ராஜேஷ், அகமதுகபீர், ஷேக் பரீத், ஜெய்லானி, கிஷான்குமார், வைத்தீஸ்வரன் ஆகிய 9 பேரை கைதுசெய்தனர். மேலும் தலைமறைவாகி விட்ட ஸ்ரீதரை போலீசார் தேடி வருகின்றனர்.
இதே சம்பவம் தொடர்பாக அவினாசி பைபாஸ் ரோட்டில் உள்ள அகமது கபீருக்கு சொந்தமான ஓட்டலை சேதப்படுத்தியதாக ஜெகன், விக்கி என்ற 2 வாலிபர்களை போலீசார் பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருப்பூர் அருகே இரு தரப்பினருக்கு இடையே ஏற்பட்ட மோதலில் 9 பேர் கைது செய்யப்பட்டுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் ராக்கியாபாளையம் பாலாஜி நகர் பகுதியில் பலத்த போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டுள்ளது.