கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு சாதகமாக ஜி.எஸ்.டி. வரி கொண்டு வரப்பட்டுள்ளது

‘கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு சாதகமாக ஜி.எஸ்.டி. வரி கொண்டு வரப்பட்டு உள்ளது’ என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் கூறினார்.

Update: 2017-07-03 23:00 GMT

கோவை,

கதிராமங்கலத்தில் போராட்டம் நடத்தியவர்கள் மீது போலீசாரின் காட்டுமிராண்டித்தனமான தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்துக்கொள்கிறேன். தாக்குதலில் ஈடுபட்ட காவல்துறையினர் மீது மாநில அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அ.தி.மு.க.வில் உள்ள 3 அணிகளுக்கு இடையே பாரதீய ஜனதாவை ஆதரிப்பதில் போட்டி நிலவி வருகிறது. அ.தி.மு.க. ஆட்சி தமிழக மக்களின் நலனை பாதுகாக்க தவறிவிட்டது. மத்திய அரசின் ஜி.எஸ்.டி வரியால் அனைத்து தரப்பு மக்களும் பாதிக்கப்பட்டு உள்ளனர்.

கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு சாதகமாக அவசர அவசரமாக ஜி.எஸ்.டி. (சரக்கு மற்றும் சேவை வரி) கொண்டு வரப்பட்டு உள்ளது. பாரதீய ஜனதா மற்றும் ஆர்.எஸ்.எஸ். ஆகியவற்றின் வெறுப்பை ஏற்படுத்தும் பிரசாரத்தால் பசு பாதுகாப்பு என்ற பெயரில் வன்முறைகள் நடைபெற்று வருகின்றன.

மத மோதல்களை உருவாக்கும் சங்பரிவார் அமைப்புகள் மீது தமிழக காவல்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும். தற்போது நடைபெற்று வரும் தமிழக சட்டசபை கூட்டத் தொடரிலேயே லோக் ஆயுக்தா சட்டத்தை கொண்டு வர வேண்டும். இந்தி திணிப்பை எதிர்த்தும், சாதி ஆணவக் கொலைகளை தடுக்கவும் தனிச்சட்டம் கொண்டு வர வேண்டும்.

இவ்வாறு ஜி.ராமகிருஷ்ணன் கூறினார்.

மேலும் செய்திகள்