மணல் கொள்ளையில் ஈடுபட்ட சினிமா நடிகர் சிவமணி குண்டர் சட்டத்தில் சிறையில் அடைப்பு
மணல் கொள்ளையில் ஈடுபட்ட சினிமா நடிகர் சிவமணி குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டார்.
பண்ருட்டி,
பண்ருட்டி அருகே உள்ள எஸ்.ஏரிபாளையத்தை சேர்ந்தவர் சிவமணி(வயது 34). இவர் “திட்டமிட்டபடி“ என்கிற சினிமா படத்தை சொந்தமாக தயாரித்தும், அதில் கதாநாயகனாகவும் நடித்து வருகிறார். இவர் நடத்திவரும் படத்தின் படப்பிடிப்பு முடியும் தருவாயில் உள்ளது.
இந்த நிலையில் பண்ருட்டி கெடிலம் ஆற்று பகுதியில் மணல் கொள்ளையில் ஈடுபட்டதாக சிவமணியை போலீசார் கடந்த சில நாட்களுக்கு முன்பு கைது செய்து, கடலூர் மத்திய சிறையில் அடைத்தனர். மணல் கொள்ளை தொடர்பாக சிவமணி மீது காடாம்புலியூர், பண்ருட்டி, முத்தாண்டிகுப்பம் ஆகிய போலீஸ் நிலையங்களில் பல்வேறு வழக்குகளும், நெய்வேலி டவுன்ஷிப் போலீசில் கள்ளநோட்டுகள் மாற்றிய வழக்கு ஒன்றும், பண்ருட்டி பகுதியில் மண்ணுளி பாம்பு கடத்தல் வழக்கு ஒன்றும் சிவமணி மீது இருந்துவருவதாக கூறப்படுகிறது.
இவரின் குற்றசெயலை தடுக்கும் வகையில் சிவமணியை குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ய மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு விஜயகுமார் கலெக்டர் ராஜேசுக்கு பரிந்துரை செய்தார். இதையேற்று சிவமணியை குண்டர் தடுப்பு சட்டத்தில் சிறையில் அடைக்க கலெக்டர் ராஜேஷ் உத்தரவிட்டார். இதற்கான உத்தரவு நகலை சிறையில் உள்ள சிவமணியிடம் காடாம்புலியூர் போலீசார் சிறைகாவலர்கள் மூலமாக வழங்கினர்.
இதுகுறித்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு விஜயகுமார் நிருபர்களிடம் கூறுகையில் மணல் கொள்ளையில் கடந்த 2 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்த சிவமணி கைது செய்யப்பட்டு கடலூர் சிறையில் அடைக்கப்பட்டார். இந்த நிலையில் அவரை தற்போது குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். டெல்டா பிரிவு போலீசாரின் தீவிர நடவடிக்கையால் தான் சிவமணியை கைது செய்ய முடிந்தது.
மேலும் மணல்கொள்ளை புகாரில் சரியாக நடவடிக்கை எடுக்காதா, காடாம்புலியூர் போலீஸ் நிலையத்தை சேர்ந்த 2 சிறப்பு சப்–இன்ஸ்பெக்டர்கள் உள்பட 5 போலீஸ்காரர்களை வேறு இடத்திற்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்கள் என்று அவர் கூறினார்.