விளைநிலத்துக்கு செல்ல பாதை வசதி கேட்டு கலெக்டரிடம் ரே‌ஷன் கார்டுகளை ஒப்படைக்க வந்த கிராம மக்கள்

விளைநிலத்துக்கு செல்ல பாதை வசதி கேட்டு கிராமமக்கள் தங்கள் ரே‌ஷன்கார்டு மற்றும் வாக்காளர்அடையாள அட்டையை கலெக்டரிடம் ஒப்படைக்க வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2017-07-03 23:00 GMT

கடலூர்,

கடலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்ற குறைகேட்பு கூட்டம் நேற்று நடைபெற்றது. அப்போது கடலூர் அருகே உள்ள சுப்பிரமணியபுரம் எஸ்.புதூரை சேர்ந்த கிராமமக்கள் கையில் ரே‌ஷன்கார்டு மற்றும் வாக்காளர் அடையாள அட்டைகளுடன் கலெக்டர் அலுவலகத்திற்கு வந்தனர். தொடர்ந்து அவர்கள், ரே‌ஷன்கார்டு மற்றும் வாக்காளர் அடையாள அட்டைகளை கலெக்டர் ராஜேசிடம் ஒப்படைக்கப்போவதாக கூறி திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதுபற்றி அறிந்த அதிகாரிகள், விரைந்து வந்து கிராம மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, வழுதலம்பட்டு பகுதியில் உள்ள தங்களின் விளைநிலத்துக்கு செல்லும் பாதையை தனிநபர் ஆக்கிரமித்து வைத்து இருப்பதால் நிலத்துக்கு செல்ல முடியாமல் சிரமப்படுவதாகவும், எனவே பாதை வசதி செய்து தரக்கோரி கலெக்டரிடம் ரே‌ஷன்கார்டு மற்றும் வாக்காளர் அடையாள அட்டையை ஒப்படைத்து அறப்போராட்டம் செய்யப்போவதாகவும் தெரிவித்தனர்.

இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் அதிகாரிகள் சமாதானம் பேசி, கலெக்டர் ராஜேசை சந்திக்க அழைத்து சென்றனர். இவர்களிடம் கோரிக்கைகள் குறித்து கேட்டறிந்த கலெக்டர் ராஜேஷ் இது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்தார். இதையடுத்து கிராம மக்கள் அங்கிருந்து கலைந்துசென்றனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

மேலும் செய்திகள்