மும்பை பாதுகாப்பு பலவீனம் அடைந்துள்ளது சிவசேனா சொல்கிறது

ஆக்ட்ராய் வரி சோதனை சாவடிகள் அகற்றப்படுவதால் மும்பை நகர பாதுகாப்பு பலவீனம் அடைந்து உள்ளது என்று சிவசேனா தெரிவித்து உள்ளது.

Update: 2017-07-02 23:13 GMT

மும்பை,

மும்பை மாநகராட்சிக்கு பெரிய வருவாய் ஆதாரமாக விளங்கியது ஆக்ட்ராய் வரி. மும்பை நகருக்குள் சரக்குகளை ஏற்றி வரும் வாகனங்களை சோதனை செய்து ஆக்ட்ராய் வரி வசூலிக்கப்பட்டு வந்தது. இந்தநிலையில் ஜி.எஸ்.டி. வரி அமலுக்கு வந்து விட்டதால் ஆக்ட்ராய் வரி சோதனை சாவடிகள் மூடப்பட்டு உள்ளன.

இதனால் மும்பை நகரின் பாதுகாப்பு கேள்விக்குறியாகி இருப்பதாக சிவசேனா கவலை தெரிவித்து உள்ளது. இது குறித்து அக்கட்சியின் மூத்த தலைவரும், எம்.பி.யுமான சஞ்சய் ராவுத் கூறியிருப்பதாவது:–

பாதுகாப்பில் பலவீனம்

ஆக்ட்ராய் வரி சோதனை சாவடிகள் செயல்பட்டபோது, வாகனங்கள் சோதனை செய்யப்படும். இதில் நகர பாதுகாப்பையும் உறுதி செய்ய முடியும். ஆனால் தற்போது ஆக்ட்ராய் வரி சோதனை சாவடிகள் அகற்றப்படுவதால், நகர பாதுகாப்பு பலவீனமடைந்து உள்ளது. ஜி.எஸ்.டி. மசோதாவை நிறைவேற்ற பாராளுமன்றத்தில் நாங்களும் ஆதரவு தெரிவித்தோம். அதே நேரத்தில் ஆக்ட்ராய் வரி ஒழிப்பு காரணமாக மும்பை நகர பாதுகாப்பு பிரச்சினையில் கவலை அடைந்து உள்ளோம்.

ஆக்ட்ராய் வரி சோதனை சாவடிகள் அகற்றப்படுவது, மும்பையின் பாதுகாப்பில் மிகப்பெரிய இடைவெளியை ஏற்படுத்தி உள்ளது. நகர பாதுகாப்பு பிரச்சினையில் சமரசம் செய்து கொள்ள முடியாது. எனவே மாற்று வழிகளில் நகர பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டும். பயங்கரவாதி கசாப்பை போல மற்றொரு பயங்கரவாதி நகருக்குள் நுழைந்து விடக்கூடாது.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

மேலும் செய்திகள்