காலாப்பட்டு மத்திய சிறையில் கவர்னர் திடீர் ஆய்வு கைதிகளுக்கு யோகா பயிற்சி அளிக்க அறிவுறுத்தினார்

காலாப்பட்டு மத்திய சிறையில் திடீர் ஆய்வு மேற்கொண்ட கவர்னர் கிரண்பெடி, கைதிகளுக்கு யோகா பயிற்சி அளிக்க அறிவுறுத்தினார்.

Update: 2017-07-02 22:02 GMT

காலாப்பட்டு,

புதுவை காலாப்பட்டு மாத்தூர் சாலையில் மத்திய சிறை உள்ளது. இங்கு தண்டனை கைதிகள் 54 பேரும், விசாரணை கைதிகள் 124 பேரும், பெண் கைதிகள் 10 பேரும், இளம் குற்றவாளிகள் 18 பேரும் அடைக்கப்பட்டு உள்ளனர். இந்த நிலையில் புதுவை கவர்னர் கிரண்பெடி நேற்று பகல் 11 மணி அளவில் காலாப்பட்டு மத்திய சிறைக்கு வந்தார். அவரை சிறைத்துறை ஐ.ஜி. பங்கஜகுமார் ஜா, மத்திய சிறை சூப்பிரண்டு பாஸ்கர் ஆகியோர் வரவேற்றனர். அங்கு நடைபெற்ற அணிவகுப்பு மரியாதையை கவர்னர் ஏற்றுக்கொண்டார்.

சிறை முழுவதும் சென்று பார்வையிட்ட கவர்னர் கிரண்பெடி அங்கு செய்யப்பட்டுள்ள பாதுகாப்பு ஏற்பாடுகள் மற்றும் கைதிகளுக்கான வசதிகளை ஆய்வு செய்தார். பின்னர் கைதிகளிடம் குறைகளை கேட்டறிந்த கவர்னர், அவர்களுடன் கலந்துரையாடினார். இதைத் தொடர்ந்து தன்னுடன் வந்திருந்த தன்னார்வ தொண்டு நிறுவன நிர்வாகிகள் மற்றும் சிறைத்துறை அலுவலர்களுடன் கவர்னர் ஆலோசனை நடத்தினார். அப்போது அவர் கூறியதாவது:–

யோகா பயிற்சி

சிறையில் அடைக்கப்பட்டுள்ள கைதிகளுக்கு தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் வாழ்வாதார பயிற்சி அளிக்கவேண்டும் என்று மத்திய அரசு அறிவுறுத்தி உள்ளது. அதன்படி தொண்டு நிறுவனங்கள் கைதிகளுக்கு யோகா பயிற்சி அளிக்கவேண்டும். அவர்களின் தனி திறன்களை வளர்க்க ஊக்கப்படுத்த வேண்டும். செஸ், கேரம் உள்ளிட்ட விளையாட்டுகளில் ஈடுபட ஆர்வம் ஏற்படுத்த வேண்டும்.

கைதிகளின் மனநிலையை மாற்ற அவ்வப்போது கலந்தாய்வு நடத்தி மருத்துவ பரிசோதனை செய்யவேண்டும். கொடூர குற்றங்களில் ஈடுபட்ட கைதிகளோடு சிறு குற்றங்களில் ஈடுபட்ட கைதிகளை பழகவிடக்கூடாது. ஆயுள் தண்டனை கைதிகளின் பிள்ளைகளுக்கு கல்வி வசதி ஏற்படுத்தி தரவேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்