பாபநாசம் அகஸ்தியர் அருவியில் சுற்றுலா பயணிகள் குதூகல குளியல்

களக்காடு தலையணை மற்றும் பாபநாசம் அகஸ்தியர் அருவியில் நேற்று சுற்றுலா பயணிகள் குவிந்து குதூகல குளியல் போட்டனர். கார்களில் கொண்டு செல்லப்பட்ட மதுபாட்டில்களை வனத்துறையினர் பறிமுதல் செய்தனர்.;

Update: 2017-07-02 23:00 GMT
களக்காடு,


களக்காடு மேற்கு தொடர்ச்சி மலையில் உள்ள தலையணை இயற்கை எழில் சூழ்ந்த பகுதி. தலையணைக்கு குளியல் நடத்த தினசரி ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். தலையணையில் தண்ணீர் வற்றியதால், கடந்த மே 1–ந் தேதி முதல் தலையணை மூடப்பட்டது. இதனால் சுற்றுலா பயணிகள் ஏமாற்றம் அடைந்தனர். இந்த நிலையில் களக்காடு பகுதியில் பெய்த சாரல் மழையை அடுத்து தலையணையில் தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது.

பயணிகள் கூட்டம்


இதனால், கடந்த 28–ந் தேதி முதல் மீண்டும் தலையணை திறக்கப்பட்டு, சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டது. இதனை தொடர்ந்து சுற்றுலா பயணிகள் தலையணையில் குவிந்து வருகின்றனர். விடுமுறை தினமான நேற்றும் சுற்றுலா பயணிகள் அதிகளவில் வந்திருந்தனர். குற்றாலத்திற்கு செல்லும் சுற்றுலா பயணிகள் தலையணைக்கும் வந்து சென்றதால் கூட்டம் அதிகளவில் காணப்பட்டது. அதேபோல் விக்கிரமசிங்கபுரம் பாபநாசம் அகஸ்தியர் அருவியிலும் சுற்றுலா பயணிகளின் கூட்டம் அலைமோதியது.

மதுபாட்டில்கள் பறிமுதல்


இப்பகுதிக்கு காரில் வரும் சுற்றுலா பயணிகளின் அனைத்து வாகனங்களும் வனத்துறையினரால் சோதனையிடப்பட்டு வருகிறது. நேற்று சில கார்களில் வனத்துறையினர் நடத்திய சோதனையில், மதுபாட்டில்கள் கண்டுபிடிக்கப்பட்டு பறிமுதல் செய்யப்பட்டது. வாகன சோதனையால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. சுற்றுலா பயணிகள் மதுபாட்டில்கள், பிளாஸ்டிக் பொருட்கள் கொண்டு வருவதை தவிர்க்க வேண்டும் என வனத்துறையினர் அறிவித்துள்ளனர்.

மேலும் செய்திகள்