ஓ.என்.ஜி.சி. நிறுவனத்தின் ஆழ்குழாய் கிணற்றில் இருந்து எரிவாயு கசிவதாக பொதுமக்கள் புகார்

நல்லாண்டார்கொல்லையில் ஓ.என்.ஜி.சி. நிறுவனத்தின் ஆழ்குழாய் கிணற்றில் இருந்து எரிவாயு கசிவதாக பொதுமக்கள் புகார் தெரிவித்து உள்ளனர்.

Update: 2017-07-02 23:00 GMT
வடகாடு,

புதுக்கோட்டை மாவட்டம் நெடுவாசல் அருகே உள்ள நல்லாண்டார்கொல்லை, வடகாடு கல்லிக்கொல்லை, வானக்கண்காடு மற்றும் கோட்டைக்காடு உள்ளிட்ட பகுதிகளில் ஓ.என்.ஜி.சி. நிறுவனம் ராட்சத ஆழ்குழாய் கிணறு அமைத்து உள்ளது. இந்தநிலையில், கடந்த பிப்ரவரி 15-ம் தேதி நெடுவாசலில் ஹைட்ரோகார்பன் எடுக்கும் திட்டத்துக்கு மத்திய அரசு அனுமதி வழங்கியது.

இதை கண்டித்து, நெடுவாசல், நல்லாண்டார்கொல்லை, வடகாடு மற்றும் கோட்டைக்காடு பகுதிகளில் பல்வேறு போராட்டங்கள் நடைபெற்றன. இதைத்தொடர்ந்து மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன், மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் மற்றும் மாவட்ட கலெக்டர் கணேஷ் ஆகியோர் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதை ஏற்று நெடுவாசலில் 22 நாட்கள் நடைபெற்ற போராட்டம் வாபஸ் பெறப்பட்டது.

எரிவாயு கசிவதாக பொதுமக்கள் புகார்

இந்தநிலையில், நெடுவாசல் உள்பட நாடு முழுவதும் 31 இடங்களில் ஹைட்ரோகார்பன் எடுப்பதற்கு தனியார் நிறுவனங்களுக்கு மத்திய அரசு ஒப்புதல் வழங்கியது. இதை கண்டித்து நெடுவாசலில் தற்போது 2-ம் கட்ட போராட்டம் தொடங்கி நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில் நெடுவாசல் அருகே உள்ள நல்லாண்டார்கொல்லையில் குடியிருப்பு மற்றும் விளைநிலங்கள் இருக்கும் பகுதியில் ஓ.என்.ஜி.சி. நிறுவனத்தால் அமைக்கப்பட்டுள்ள ஆழ்குழாய் கிணறுகள் மீது உள்ள ராட்சத குழாய்கள் மூடப்பட்டிருக்கும் நிலையில், அதில் இருந்து சில நாட்களாக எரிவாயு கசிவதாகவும், அதன் அருகில் செல்லும்போது கண் எரிச்சல் ஏற்படுவதாகவும், எரிவாயுவை சுவாசிக்கும்போது மயக்கம் ஏற்படுவதாகவும் அப்பகுதி சேர்ந்த பொதுமக்கள் புகார் கூறுகின்றனர்.

அகற்ற நடவடிக்கை

இது குறித்து அந்த பகுதியை சேர்ந்த சிலர் கூறுகையில், நல்லாண்டார்கொல்லையில் ஓ.என்.ஜி.சி நிறுவனத்தால் அமைக்கப்பட்டு உள்ள ஆழ்குழாய் கிணறு அருகே குடியிருப்பு உள்ளது. கடந்த சில நாட்களாக அந்த ஆழ்குழாய் கிணற்றில் அமைக்கப்பட்டு உள்ள ராட்சத குழாய்களில் இருந்து எரிவாயு கசிந்து வெளியேறுகிறது. மேலும் ஆழ் குழாய் கிணற்றில் அருகே சென்றால் கண் எரிச்சல் ஏற்படுகிறது. மேலும் அதிலிருந்து கசிந்து வரும் எரிவாயுவை சுவாசிக்கும் போது தலை சுற்றி மயக்கம் வருகிறது.

இதில் இருந்து வெளியேறும் வாயுவால் எங்களுக்கும், எங்கள் குழந்தைகளுக்கும் ஏதாவது ஆகிவிடுமோ என்றும், தீப்பிடித்து பெரும் அசம்பாவிதம் ஏற்பட்டுவிடுமோ? என்று அச்சத்துடன் நாங்கள் வசித்து வருகிறோம். நல்லாண்டார்கொல்லையில் ஹைட்ரோகார்பன் திட்டத்தை எதிர்த்து 37 நாட்களாக போராடினோம். அப்போது, எங்களுடன் பேச்சுவார்த்தை நடத்திய கலெக்டர் ஆழ்குழாய் கிணற்றை அகற்றுவதாக வாக்குறுதி அளித்தார். ஆனால் இன்றுவரை அகற்றப்படவில்லை. ஆகவே ஓ.என்.ஜி.சி. நிறுவனத்தின் ஆழ்குழாய் கிணற்றை மாவட்ட நிர்வாகம் உடனடியாக பாதுகாப்பான முறையில் அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

மேலும் செய்திகள்