குடிநீர் கேட்டு காலிக்குடங்களுடன் பொதுமக்கள் சாலை மறியல்
திண்டுக்கல்லில், குடிநீர் கேட்டு காலிக்குடங்களுடன் பொதுமக்கள் சாலை மறியல்
திண்டுக்கல்,
திண்டுக்கல் மாநகராட்சியில் 32 மற்றும் 33–வது வார்டு பகுதிகளில் கடந்த ஒரு மாதமாக சீரான குடிநீர் வினியோகம் செய்யப்படவில்லை. இது குறித்து அதிகாரிகளிடம் முறையிட்டும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என பொதுமக்கள் குற்றம்சாட்டி வந்தனர். இந்த நிலையில், நேற்று காலையில் திண்டுக்கல்– நத்தம் சாலையில் திடீரென காலிக்குடங்களுடன் பொதுமக்கள் மறியலில் ஈடுபட்டனர்.
இது குறித்து தகவல் அறிந்ததும் போலீசார் மற்றும் அதிகாரிகள் உடனடியாக அங்கு விரைந்தனர். அவர்கள் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, சீரான குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்தனர். இதைத்தொடர்ந்து மறியலை கைவிட்டு பொதுமக்கள் கலைந்து சென்றனர். இதனால் அந்த பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.