ஊத்துக்கோட்டையில் ஆமை வேகத்தில் நடைபெறும் பால பணிகள் விரைந்து முடிக்க பொதுமக்கள் கோரிக்கை
ஊத்துக்கோட்டையில் பால பணிகள் ஆமை வேகத்தில் நடைபெறுகிறது. அதை விரைந்து முடிக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
ஊத்துக்கோட்டை,
ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டம் பிச்சாட்டூரில் ஆரணியாறு அணை உள்ளது. இங்கிருந்து ஆரணி ஆற்றில் திறந்து விடப்படும் தண்ணீர் சுருட்டப்பள்ளி, ஊத்துக்கோட்டை, பெரியபாளையம், ஆரணி, பொன்னேரி வழியாக பாய்ந்து பழவேற்காடு பகுதியில் வங்கக் கடலில் கலக்கிறது. இதை தடுத்து விவசாயிகள் பயன்பெறும் வகையில் அரசு 1953–ம் ஆண்டு சுருட்டப்பள்ளியில் ஆரணி ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்டியது.
இந்த தடுப்பணையில் இருந்து ஊத்துக்கோட்டை ஏரிக்கு தண்ணீர் திறந்து விடப்படுவது வழக்கம். ஊத்துக்கோட்டை நகர எல்லையில் உள்ள பாலத்தின் கீழ் பகுதி வழியாக தண்ணீர் பாய்ந்து ஏரிக்கு செல்லும்.
ஆமைவேகத்தில் பணிஇந்த பாலத்தை கடந்துதான் புத்தூர், ரேணிகுண்டா, திருப்பதி, திருமலை, கடப்பா, பெங்களூரு போன்ற பகுதிகளுக்கு வாகனங்கள் சென்று வருகின்றன. இந்த பாலம் வழியாக வாகனங்கள் செல்லும் போது அதிர்வு ஏற்பட்டு பாலத்தின் அடியில் உள்ள சிமெண்டு கழன்று விழுந்து வருகின்றன.
இதனை கருத்தில் கொண்டு பாலத்தையொட்டி இரு புறங்களிலும் 2 புதிய பாலங்கள் அமைக்க தமிழக அரசு ரூ.50 லட்சம் ஒதுக்கியது. இந்த நிதியை கொண்டு கடந்த அக்டோபர் மாதம் பாலம் அமைக்கும் பணிகள் தொடங்கப்பட்டது. இந்த பணிகள் ஆமை வேகத்தில் நடந்து வருவதாக பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர். குறுகிய பாலம் என்பதால் வாகனங்கள் கடந்து செல்ல காலதாமதம் ஏற்படுகிறது. இதனை கருத்தில் கொண்டு புதிய பாலப்பணிகளை விரைந்து முடிக்க நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.