காஞ்சீபுரம் மாவட்டத்தில் 5 மாதத்தில் ரூ.2 கோடி நகைகள் மீட்பு போலீஸ் சூப்பிரண்டு தகவல்

காஞ்சீபுரம் மாவட்டத்தில் கடந்த 5 மாதத்தில் ரூ.2 கோடி நகைகள் மீட்கப்பட்டு உரியவர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக காஞ்சீபுரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சந்தோஷ் ஹதிமானி தெரிவித்தார்.;

Update: 2017-07-02 22:15 GMT

காஞ்சீபுரம்,

காஞ்சீபுரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சந்தோஷ் ஹதிமானி நிருபர்களிடம் பேசும்போது கூறியதாவது:–

காஞ்சீபுரம் மாவட்டத்தில் குற்றங்கள் நடக்காவண்ணம் போலீசார் விழிப்புடன் ரோந்துப்பணியில் ஈடுபட்டு வருகின்றனர். கடந்த ஜனவரி மாதம் 2017 முதல் மே மாதம் 2017 வரை 5 மாதத்தில் ரூ.3 கோடி மதிப்புள்ள தங்க, வெள்ளி நகைகள் திருட்டு நடந்துள்ளது. இதில் ரூ.2 கோடி மதிப்புள்ள தங்க, வெள்ளி நகைகள் கண்டுபிடிக்கப்பட்டு உரியவர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இதையொட்டி 25 பெண்கள் உள்பட 250 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

மாவட்டத்தில் கொலை மற்றும் கொலை முயற்சி வழக்குகளில் சம்பந்தப்பட்ட 30 பேர் கைது செய்யப்பட்டு குண்டர் தடுப்பு சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

துண்டு பிரசுரங்கள்

மணல் கடத்தலில் ஈடுபட்ட 3 பேர் குண்டர் தடுப்பு சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். கள்ளச்சாராய வழக்கில் 7 பேர் கைது செய்யப்பட்டு கள்ளச்சாராய தடுப்பு பிரிவின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். கடந்த 2016–ம் ஆண்டை விட இந்த ஆண்டு குற்றங்கள் குறைந்துள்ளன.

மாவட்டம் முழுவதும் பகல், இரவு நேரங்களில் விழிப்புடன் போலீசார் ரோந்துப்பணியில் ஈடுபட்டுள்ளனர். வெளியூர் செல்பவர்கள் முன்கூட்டியே அந்தந்த பகுதி போலீஸ் நிலையங்களில் தகவலை சொல்லிவிட்டு செல்லவேண்டும். ஏனென்றால் போலீசார் அந்த வீட்டுக்கு யாராவது திருடர்கள் வருகிறார்களா என்பதை கண்காணிக்க வசதியாக இருக்கும்.

சென்னை–பெங்களூரு தேசிய நெடுஞ்சாலை, சென்னை–திருச்சி தேசிய நெடுஞ்சாலை, சென்னை–திருப்பதி தேசிய நெடுஞ்சாலைகளில் வாகன விபத்துக்கள் குறைந்துள்ளன. ஆங்காங்கே தேசிய நெடுஞ்சாலைகளில் போக்குவரத்து போலீசார் வரும் வாகனங்களை நிறுத்தி போக்குவரத்து விதிகள் அடங்கிய துண்டு பிரசுரங்களை வழங்கி வருகின்றனர்.

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்