தியேட்டர் உரிமையாளர்களின் போராட்டத்துக்கு தமிழக அரசே காரணம் தமிழிசை சவுந்தரராஜன் பேட்டி

தியேட்டர் உரிமையாளர்களின் போராட்டத்துக்கு தமிழக அரசே காரணம் என தமிழக பா.ஜனதா தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் கூறியுள்ளார்.;

Update: 2017-07-02 22:30 GMT

ஆலந்தூர்,

தமிழகத்தில் சினிமா டிக்கெட்டுகளுக்கு விதிக்கப்பட்டு உள்ள 30 சதவீத கேளிக்கை வரிக்கு எதிர்ப்பு தெரிவித்து மாநிலம் முழுவதும் இன்று (திங்கட்கிழமை) முதல் தியேட்டர்கள் மூடப்படுகின்றன. தியேட்டர் உரிமையாளர்களின் இந்த போராட்டத்துக்கு தமிழக அரசே காரணம் என தமிழக பா.ஜனதா தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் கூறியுள்ளார்.

இது தொடர்பாக சென்னை விமான நிலையத்தில் நேற்று அவர் நிருபர்களிடம் கூறியதாவது:–

பொருளாதார புரட்சி

தியேட்டர் உரிமையாளர்களின் போராட்டத்துக்கு மத்திய அரசின் சரக்கு, சேவை வரி காரணம் இல்லை. சினிமா டிக்கெட்டுக்கு மாநில அரசு 30 சதவீத கேளிக்கை வரி விதித்ததால்தான் அவர்கள் போராட்டம் நடத்துகின்றனர். எனவே இந்த போராட்டத்துக்கு தமிழக அரசே காரணம் ஆகும்.

மத்திய அரசின் சரக்கு, சேவை வரி (ஜி.எஸ்.டி.) ஒரு பொருளாதார புரட்சியாகும். புரட்சிகளின் தாய் என்றுகூட சொல்கிறார்கள். இந்தியாவிற்கு நள்ளிரவில் சுதந்திரம் கிடைத்தது போல் நடுஇரவில் பொருளாதார சுதந்திரம் கிடைத்து உள்ளது. எனினும் விமர்சனங்களும் எழுந்து கொண்டு இருக்கிறது.

1 லட்சம் வேலைவாய்ப்புகள்

ப.சிதம்பரம், தாங்கள் தான் கொண்டுவர முயற்சி செய்ததாக கூறுகிறார். அப்படியென்றால் பாராளுமன்றத்திற்கு வந்து ஜி.எஸ்.டி.யை அறிமுகப்படுத்தியிருக்க வேண்டியது தானே. அவர்கள் வராமல் மிகப்பெரிய வரலாற்று பிழையை செய்து இருக்கிறார்கள். இதனால் ஜி.எஸ்.டி.யால் கிடைக்கும் எந்த ஒரு பெருமையும் அவர்களுக்கு சென்று சேராது.

ஜி.எஸ்.டி.யால் 1 லட்சம் வேலைவாய்ப்புகள் உருவாகும் என்று மத்திய தொழில்துறை மந்திரி கூறி உள்ளார். மாநிலங்களுக்கு இடையே உள்ள சோதனைச்சாவடிகள் விலக்கப்பட்டு உள்ளன. அத்தியாவசிய பொருட்களின் விலைகள் குறைந்துள்ளது. இது தொடர்பாக மக்களின் சந்தேகங்களை போக்க சிறப்பு எண் வழங்கப்பட்டு உள்ளது.

கதிராமங்கலம் தடியடி

கதிராமங்கலத்தில் போலீசார் தடியடி நடத்தியது கண்டிக்கத்தக்கது. ஓ.என்.ஜி.சி. அதிகாரிகள் மூலம் அங்குள்ள மக்களின் அச்சத்தை போக்குவதற்கு பதிலாக, காவல்துறை பயத்தை ஏற்படுத்தியிருப்பது போல் நடந்த கொண்டது சரியான நடவடிக்கை அல்ல. நடந்த விபத்தை தடுக்க வேண்டியது ஓ.என்.ஜி.சி.யின் கடமை.

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்