அரக்கோணத்தை தலைமையிடமாக கொண்டு புதிய கல்வி மாவட்டம் உருவாக்கப்படும்

அரக்கோணத்தை தலைமையிடமாக கொண்டு புதிய கல்வி மாவட்டம் உருவாக்கப்படும் என்று பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் பேசினார்.;

Update:2017-07-02 05:40 IST

அரக்கோணம்,

அரக்கோணத்தை தலைமையிடமாக கொண்டு புதிய கல்வி மாவட்டம் உருவாக்கப்படும் என்று பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் பேசினார்.

அரக்கோணம் வீட்டு வசதி வாரிய குடியிருப்பு பகுதியில் தமிழக அரசு மற்றும் அல்ட்ராடெக் சிமெண்ட் நிறுவனம் இணைந்து தன்னிறைவுத் திட்டத்தின் மூலமாக ரூ.70 லட்சம் மதிப்பில் கட்டப்பட்ட டேக்வாண்டோ உள் விளையாட்டு அரங்கம் திறப்பு விழா நேற்று இரவு நடந்தது.

விழாவிற்கு மாவட்ட கலெக்டர் ராமன் தலைமை தாங்கினார். எம்.எல்.ஏ.கள் சு.ரவி (அரக்கோணம்), என்.ஜி.பார்த்திபன் (சோளிங்கர்), நகர கூட்டுறவு வங்கி தலைவர் துரைகுப்புசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட விளையாட்டு அலுவலர் சு.ரமேஷ் வரவேற்றார்.

சிறப்பு அழைப்பாளராக பள்ளி கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் கலந்து கொண்டு, ரூ.70 லட்சம் மதிப்பில் கட்டப்பட்டு உள்ள டேக்வாண்டோ உள்விளையாட்டு அரங்கத்தை ரிப்பன் வெட்டி திறந்து வைத்து நலத்திட்ட உதவிகளை வழங்கி பேசினார். வணிகவரித்துறை அமைச்சர் கே.சி.வீரமணி குத்துவிளக்கேற்றி வாழ்த்தி பேசினார்.

விழாவில் அமைச்சர் செங்கோட்டையன் பேசியதாவது:–

வேலூர் மாவட்டத்தில் அரக்கோணத்தில் புதிதாக திறக்கப்பட்டு உள்ள டேக்வாண்டோ உள்விளையாட்டு அரங்கத்தை மாணவ–மாணவிகள் நன்றாக பயன்படுத்தி கொள்ள வேண்டும். விளையாட்டுத்துறைக்கு அரசு பல்வேறு சலுகைகள் அளித்து வருகிறது. தற்போது கல்வித்துறையில் பல்வேறு மாற்றங்களை அரசு கொண்டு வந்துள்ளது. இதேபோல், சட்டமன்ற கூட்டத்தொடர் முடிந்த பின்னர் விளையாட்டுத்துறையில் அரசு பல்வேறு மாற்றங்களை கொண்டுவர உள்ளது.

தமிழ்நாட்டில் உள்ள மாணவ–மாணவிகளை கல்வியில் மட்டுமில்லாமல் விளையாட்டிலும் சிறந்து விளங்கும் வகையில் பல்வேறு சிறப்புத்திட்டங்களை அரசு செயல்படுத்த உள்ளது. மாணவர்கள் அதை பயன்படுத்தி விளையாட்டில் உலக அளவில் சிறந்தவர்களாக திகழ வேண்டும். உலகமே திரும்பி பார்க்கும் வகையில் விளையாட்டுத்துறையில் தமிழக மாணவர்கள் முதன்மைப் பெற்றவர்களாக இருக்க வேண்டும். விளையாட்டில் மாணவர்கள் தோல்வி அடைந்து விட்டோம் என்று ஒதுங்கி விடக்கூடாது. அரசு அளிக்கும் சலுகைகளை பயன்படுத்தி விடாமுயற்சியுடன் செயல்பட்டு வெற்றி பெற வேண்டும்.

வேலூர் மாவட்டத்தில் விளையாட்டுத்துறைக்கு நீச்சல் உள்ளிட்ட அனைத்து விளையாட்டுகளும் இடம்பெறும் வகையில் ரூ.5 கோடியில் புதிய உள்விளையாட்டு அரங்கம் அமைக்கப்படும். அரக்கோணம் சட்டமன்ற தொகுதியில் ரூ.1 கோடியில் புதிய விளையாட்டு அரங்கம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும். விளையாட்டு வீரர்களுக்கு தமிழக அரசு சார்பில் 4 கோடியே 9 லட்சம் ரூபாய் ஊக்கத்தொகை வழங்கப்பட்டு உள்ளது. வேலூர் மாவட்டத்தில் தற்போது வேலூர், திருப்பத்தூர் ஆகிய கல்வி மாவட்டங்கள் இருந்து வருகிறது.

அரக்கோணம் தொகுதி எம்.எல்.ஏ., சு.ரவி அரக்கோணத்தை மையமாக கொண்டு புதிய கல்வி மாவட்டம் உருவாக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்துப் பேசினார். அவரது கோரிக்கையின் அடிப்படையில் இந்த ஆண்டே அரக்கோணத்தை தலைமையிடமாக கொண்டு புதிய கல்வி மாவட்டம் உருவாக்கப்படும். மற்ற மாநிலங்கள் வியந்து போகும் அளவில் தமிழ்நாட்டில் வரும் காலங்களில் மறைந்த முன்னாள் முதல்–அமைச்சர் ஜெயலலிதா அமைத்துத் தந்தப் பாதையில் தமிழகத்தில் சிறப்பான ஆட்சி நடைபெற்று வருகிறது.

இவ்வாறு அவர் பேசினார்.

அதைத்தொடர்ந்து செங்கோட்டையன் நிருபர்களிடம் கூறியதாவது:–

பள்ளி கல்வித்துறையில் தமிழக அரசு செய்துள்ள பல்வேறு மாற்றங்கள் காரணமாக கல்வியில் மாணவர்கள் நல்ல நிலைக்கு வருவார்கள். அரசு பள்ளியில் அதிக அளவில் மாணவர்கள் சேர்ந்து படிக்கும் நிலை உருவாகும். கல்வியில் செய்துள்ள மாற்றத்தால் அரசு பள்ளியில் இடம் கிடைக்காமல் போகும் நிலை வரும் காலங்களில் ஏற்படும்.

டெட் தேர்வில் தேர்ச்சி பெறாத மாணவர்களுக்கு மீண்டும் அரசு சார்பில் வாய்ப்புகள் வழங்கப்படும். அதை மாணவர்கள் பயன்படுத்தி கொள்ள வேண்டும். கணினி அறிவியலில் தேர்ச்சி பெற்று பி.எட் பட்டம் முடித்த 40 ஆயிரம் பேருக்கு வேலை வழங்குவதற்கு அரசு தேவையான நடவடிக்கைகள் எடுத்து வருகிறது. கல்வித்துறையில் செய்துள்ள மாற்றத்தால் தமிழகம் இந்தியாவில் முதன்மை மாநிலமாக திகழும்.

இவ்வாறு அவர் கூறினார்.

முன்னதாக 120 பேருக்கு இருளர் சாதி சான்றிதழ், 30 பேருக்கு முதியோர் உதவித்தொகை, 8 பேருக்கு திருமண உதவித்தொகை, 8 பேருக்கு இயற்கை மரணம் உதவித்தொகை உள்ளிட்ட ரூ.5 லட்சத்து 9 ஆயிரத்து 800 மதிப்பில் நலத்திட்ட உதவிகளை அமைச்சர் செங்கோட்டையன் வழங்கினார்.

மேலும் தமிழக அரசின் நூறு நாள் சாதனைப் புத்தகம் விழாவில் வெளியிடப்பட்டது. விழாவில் டேக்வாண்டோ சங்க தலைவர் டாக்டர் சி.எஸ்.சந்திரமவுலி, வேலூர் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் ஏ.ஜி.விஜயன் மற்றும் கட்சியின் மாநில, மாவட்ட, நகர, ஒன்றிய நிர்வாகிகள், முன்னாள் உள்ளாட்சி பிரதிநிதிகள், கூட்டுறவு சங்க நிர்வாகிகள், அரசு அலுவலர்கள், டேக்வாண்டோ சங்க நிர்வாகிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் டேக்வாண்டோ சங்க செயலாளர் எஸ்.கோதண்டன் நன்றி கூறினார்.


மேலும் செய்திகள்