மண்டியாவில் 2–வது நாளாக போராட்டம் சாலை மறியலில் ஈடுபட்ட விவசாயிகள் கைது

கே.ஆர்.எஸ். அணையில் இருந்து தமிழகத்திற்கு தண்ணீர் திறந்துவிடப்பட்டுள்ளதை கண்டித்து மண்டியாவில் 2–வது நாளாக நேற்று போராட்டம் தொடர்ந்தது.

Update: 2017-07-01 21:49 GMT

மண்டியா,

கே.ஆர்.எஸ். அணையில் இருந்து தமிழகத்திற்கு தண்ணீர் திறந்துவிடப்பட்டுள்ளதை கண்டித்து மண்டியாவில் 2–வது நாளாக நேற்று போராட்டம் தொடர்ந்தது. சாலை மறியலில் ஈடுபட்ட விவசாயிகள் கைது செய்யப்பட்டனர்.

காவிரி நதிநீர் பங்கீட்டு விவகாரத்தில் தமிழகம், கர்நாடகம் இடையே நீண்ட காலமாக பிரச்சினை இருந்து வருகிறது. கர்நாடக அரசு கடந்த சில ஆண்டுகளாக காவிரி நடுவர் மன்றம் உத்தரவுப்படி தமிழகத்திற்கு தண்ணீர் வழங்காமல் இருந்து வருகிறது. அதற்கு, கர்நாடகத்தில் போதிய மழை பெய்யவில்லை எனவும், இதனால் கர்நாடகத்தில் கடும் வறட்சி நிலவுவதாகவும் கர்நாடக அரசு காரணம் கூறி வருகிறது.

அதேப் போல் நடப்பு ஆண்டிலும் தமிழகத்திற்கு வழங்க வேண்டிய போதிய தண்ணீரை கர்நாடகம் வழங்கவில்லை. இதனால் காவிரியில் தமிழகத்திற்கு தண்ணீர் திறந்துவிட காவிரி டெல்டா பாசன விவசாயிகளும், தமிழக அரசியல் தலைவர்களும் வலியுறுத்தி வருகின்றனர். அத்துடன் காவிரி விவகாரத்தில் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க தமிழக அரசியல் கட்சிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இந்த நிலையில் கடந்த சில வாரங்களாக கர்நாடகத்தில் தென்மேற்கு பருவமழை தொடங்கி பெய்து வருகிறது. குறிப்பாக குடகு மாவட்டம் மற்றும் கேரள மாநிலம் வயநாடு மாவட்டத்திலும் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்து கொட்டி தீர்த்து வருகிறது. இதனால் காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

இதனால் மண்டியா மாவட்டம் ஸ்ரீரங்கப்பட்டணாவில் உள்ள கிருஷ்ணராஜ சாகர் (கே.ஆர்.எஸ்.) அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. இங்கிருந்து தான் தமிழகத்திற்கு காவிரியில் தண்ணீர் திறந்துவிடப்படுவது வழக்கம். இந்த நிலையில் நேற்று முன்தினம் காலை 7 மணி முதல் கே.ஆர்.எஸ். அணையில் இருந்து தமிழகத்திற்கு தண்ணீர் திறந்துவிடப்பட்டுள்ளது. நேற்று முன்தினம் வினாடிக்கு 2,365 கனஅடி வீதம் தண்ணீர் காவிரியில் தமிழகத்திற்கு திறக்கப்பட்டது.

இதை கண்டித்து விவசாயிகள், கன்னட அமைப்பினர், மாணவர்கள் மண்டியா மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் ஸ்ரீரங்கப்பட்டணாவில் காவிரி ஆற்றில் இறங்கி விவசாயிகள், தமிழகத்திற்கு தண்ணீர் திறந்தவிட்ட கர்நாடக அரசையும், தமிழக அரசையும் கண்டித்து போராட்டம் நடத்தினர்.

இந்த நிலையில் 2–வது நாளாக நேற்றும் கே.ஆர்.எஸ். அணையில் இருந்து தமிழகத்திற்கு தண்ணீர் திறந்துவிடப்பட்டுள்ளது. அதாவது வினாடிக்கு 2,712 கனஅடி வீதம் அணையில் இருந்து தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. இந்த நீர், காவிரி ஆறு மூலமாக தமிழகத்திற்கு செல்கிறது. அதேப் போல் மைசூரு மாவட்டம் எச்.டி.கோட்டை தாலுகா பீச்சனஹள்ளி கிராமத்தில் உள்ள கபினி அணையில் இருந்தும் தண்ணீர் திறந்துவிடப்பட்டுள்ளது.

நேற்று மாலை நிலவரப்படி கே.ஆர்.எஸ். அணையில் (மொத்த நீர்மட்டம்–124.80 அடி) நீர் இருப்பு 72.40 அடி ஆகும். அணைக்கு வினாடிக்கு 7,456 கனஅடி வீதம் தண்ணீர் வந்துகொண்டு இருக்கிறது. அதே வேளையில் அணையில் இருந்து வினாடிக்கு 2,712 கனஅடி வீதம் திறந்துவிடப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு இதே நாளில் அணையின் நீர் இருப்பு 78.30 அடியாக இருந்தது குறிப்பிடத்தக்கது.

இதை கண்டித்து 2–வது நாளாக நேற்றும் மண்டியா மாவட்டத்தில் மத்தூர், மலவள்ளி, ஸ்ரீரங்கப்பட்டணா, நாகமங்களா, பாண்டவபுரா ஆகிய பகுதிகளில் விவசாயிகளும், கன்னட அமைப்பினரும் போராட்டத்தில் ஈடுபட்டனர். மண்டியாவில் உள்ள காவிரி நீர்ப்பாசனத் துறை அலுவலகத்தை முற்றுகையிட்டு விவசாயிகளும், கன்னட அமைப்பினரும், அரசியல் கட்சியினரும் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள், தமிழகத்திற்கு திறந்துவிடப்பட்டுள்ள தண்ணீரை உடனே நிறுத்தக் கோரியும், கர்நாடக அரசு மற்றும் தமிழக அரசுக்கு எதிராகவும் கோ‌ஷங்களை எழுப்பினர்.

மேலும் மண்டியா டவுனில் பெங்களூரு–மைசூரு தேசிய நெடுஞ்சாலையில் விசுவேஸ்வரய்யா சிலை அருகே கர்நாடக விவசாயிகள் சங்கத்தினர் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அந்த சாலையில் சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதைதொடர்ந்து சாலை மறியலில் ஈடுபட்ட 50–க்கும் மேற்பட்ட விவசாயிகளை மண்டியா டவுன் போலீசார் கைது செய்தனர். அதேப் போல் ஸ்ரீரங்கப்பட்டணாவிலும் ஏராளமான விவசாயிகள் சாலை மறியலில் ஈடுபட்டனர். அவர்களையும் போலீசார் கைது செய்தனர்.

தமிழகத்திற்கு காவிரியில் தண்ணீர் திறந்துவிடப்பட்டுள்ளதை கண்டித்தும், உடனே கே.ஆர்.எஸ். அணையில் இருந்து தண்ணீர் வெளியேற்றுவதை நிறுத்தக் கோரியும் மத்தூரில் நேற்று வக்கீல்கள் கோர்ட்டு புறக்கணிப்பில் ஈடுபட்டனர். பின்னர் அவர்கள் ஊர்வலமாக சென்று பெங்களூரு–மைசூரு தேசிய நெடுஞ்சாலையில் மறியலில் ஈடுபட்டனர். அதேப் போல் பாண்டவபுராவில் பா.ஜனதாவினர் தமிழகத்திற்கு தண்ணீர் திறந்துவிட்ட கர்நாடக அரசையும், கர்நாடக முதல்–மந்திரி சித்தராமையாவும் கண்டித்து போராட்டம் நடத்தினர்.

விவசாயிகள் போராட்டம் காரணமாக மண்டியா மாவட்டத்தில் தொடர்ந்து பதற்றமும், பரபரப்பும் நீடித்து வருகிறது. இதனால் மாவட்டம் முழுவதும் ஆயிரக்கணக்கான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

இதற்கிடையே விவசாயிகளின் போராட்டத்தால் கே.ஆர்.எஸ். அணை மற்றும் பிருந்தாவன் பூங்காவுக்கு செல்ல சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால் அந்தப் பகுதிகள் மக்கள் நடமாட்டமின்றி வெறிச்சோடி கிடந்தன. மேலும் முன்எச்சரிக்கை நடவடிக்கையாக கே.ஆர்.எஸ். அணை பகுதியில் 500–க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணிக்காக குவிக்கப்பட்டுள்ளனர். அதேப் போல் மண்டியா டவுனில் தமிழர்கள் வசிக்கும் பகுதியான தமிழ் காலனியிலும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் கைதான விவசாயிகள் அனைவரும் மாலையில் விடுவிக்கப்பட்டனர்.

மேலும் செய்திகள்