நதிநீர் பிரச்சினையில் மத்திய அரசு தமிழகத்துக்கு துரோகம் செய்துவருகிறது

நதிநீர் பிரச்சினையில் மத்திய அரசு தமிழகத்துக்கு துரோகம் செய்துவருகிறது என்று நாகையில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் இந்திய கம்யூனிஸ்டு கட்சி மாநில செயலாளர் முத்தரசன் பேசினார்.

Update: 2017-07-01 22:45 GMT
நாகப்பட்டினம்,

நாகையில் இந்திய கம்யூனிஸ்டு கட்சி சார்பில் இந்தியாவை மீட்போம் தமிழ்நாட்டை காப்போம் என்ற பிரசார பேரியக்க வரவேற்பு பொதுக்கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட செயலாளர் செல்வராசு தலைமை தாங்கினார். சிறுபான்மை குழு மாநில துணை தலைவர் தமிம்அன்சாரி முன்னிலை வகித்தார். நாகை ஒன்றிய செயலாளர் பாண்டியன் வரவேற்றார். இதில் முன்னாள் எம்.எல்.ஏ. பத்மாவதி, முன்னாள் மாவட்ட ஊராட்சி தலைவர் செல்வராஜ், மாநில நிர்வாகக்குழுவை சேர்ந்த செங்கோடன் ஆகியோர் பேசினர். கூட்டத்தில் மாநில செயலாளர் முத்தரசன் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

தில்லையாடியில் அமைக்கப்பட்டுள்ள காந்தி சிலை சேதமடைந்துள்ளது. இதனை சரிசெய்ய மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையெனில் இந்திய கம்யூனிஸ்டு கட்சி சார்பில் விரைவில் போராட்டம் நடத்தப்படும். மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா ஜி.எஸ்.டி.யை எதிர்த்து வந்தார். ஆனால் தற்போதைய எடப்பாடி அரசு ஜி.எஸ்.டி. அமல்படுத்தியுள்ளதற்கு ஆதரவு தெரிவித்துள்ளது.

ஜி.எஸ்.டி. என்பது வணிகர்களை பாதிக்கும் என்பதால் வணிகர்கள் பல்வேறு போராட்டங்களை அறிவித்துள்ளனர். இதேபோல் இது விசைத்தறி உரிமையாளர்கள், ஜவுளி உரிமையாளர்கள், தீப்பெட்டி தொழிற்சாலை உரிமையாளர்கள் என அனைத்து தரப்பினரும் ஜி.எஸ்.டி.யை எதிர்த்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். மக்களுக்கு பாதிப்பு என்பதாலேயே ஜி.எஸ்.டி. கூட்டத்தை இந்திய கம்யூனிஸ்டு கட்சி புறக்கணித்தது.

தமிழகத்திற்கு துரோகம்

தமிழகத்திற்கு நிரந்தரமாக தண்ணீர் கிடைக்கும் வகையில் காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தும், இதுவரை காவிரி மேலாண்மை வாரியத்தை மத்திய அரசு அமைக்காமல் மவுனம் காத்து வருகிறது. அதேபோல், பாலாற்றின் நடுவே கட்டப்படும் தடுப்பணை பணிகளையும், பவானி ஆற்றின் இடையே கட்டப் படும் தடுப்பணை பணிகளையும் மத்திய அரசு தடுக்கவில்லை. எனவே நதிநீர் பிரச்சினையில் மத்திய அரசு தமிழகத்துக்கு துரோகம் செய்துவருகிறது.

140 ஆண்டுகளில் ஏற்படாத வறட்சி தமிழ்நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ளது. இதற்கு வறட்சி நிவாரணமாக தமிழக அரசு ரூ.62 ஆயிரம் கோடியை மத்திய அரசிடம் இருந்து கோரியிருந்தது. ஆனால் மத்திய அரசு வெறும் ரூ.2016 கோடி மட்டுமே வழங்கியது. ஆனால் இதற்கு தமிழக அரசு எந்தவித எதிர்ப்பும் தெரிவிக்கவில்லை. தமிழ்நாட்டில் தடைசெய்யப்பட்ட குட்கா உள்ளிட்ட போதை பொருட்களை விற்பனை செய்ய, உயர் போலீஸ் அதிகாரி உள்ளிட்டோருக்கு ரூ.40 கோடி வரை லஞ்சம் கொடுக்கப்பட்டதாக வருமான வரித்துறை தெரிவித்தது. ஆனால் இதுகுறித்து இதுவரை எந்தவித மேல்நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. வருமான வரித்துறையை அரசியல் ஆதாயத்துக்காக மத்திய அரசு பயன்படுத்துகிறது. இந்தியாவில் நிலவும் மதசார்பற்ற கொள்கைக்கு தற்போது ஆபத்து வந்துள்ளது. எனவே அதை காக்க வேண்டியது அவசியமாகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

கூட்டத்தில் விவசாய சங்க மாவட்ட செயலாளர் சம்பந்தம், இந்திய கம்யூனிஸ்டு கட்சி ஒன்றிய செயலாளர்கள் செல்வம், பாபுஜி, விவசாய சங்க மாநில குழு உறுப்பினர் சரபோஜி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்