நாகை நகராட்சியில் 81 ஆயிரம் வாக்காளர்கள் உள்ளனர் ஆணையர் தகவல்

நாகை நகராட்சியில் 81 ஆயிரம் வாக்காளர்கள் உள்ளனர் என்று நகராட்சி ஆணையர் ஜான்சன் கூறினார்.;

Update: 2017-07-01 22:30 GMT
நாகப்பட்டினம்,

நாகை நகராட்சிக்குட்பட்ட 36 வார்டுகளுக்கான வாக்காளர் பட்டியல் வெளியிடும் நிகழ்ச்சி நாகை நகராட்சி அலுவலகத்தில் நடைபெற்றது. இதில் நாகை நகராட்சி ஆணையர் ஜான்சன் கலந்து கொண்டு 36 வார்டுகளுக்கான வாக்காளர் பட்டியலை வெளியிட்டார். பின்னர் இதுகுறித்து அவர் கூறியதாவது:-

2006-ம் ஆண்டு தமிழ்நாடு பேரூராட்சிகள், நகராட்சிகள் மற்றும் மாநகராட்சிகள் விதிகளுக்கிணங்க, நாகை நகராட்சியில் உள்ள 36 வார்டுகளுக்கான வாக்காளர் பட்டியல், சட்டமன்ற தொகுதி வாக்காளர் பட்டியலில் அடங்கிய விவரங்களின் அடிப்படையில் தயாரிக்கப்பட்டு, அதன் நகல் ஆய்விற்காக வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி நாகை நகராட்சியில் 36 வார்டுகளிலும் 39 ஆயிரத்து 873 ஆண்கள், 41 ஆயிரத்து 708 பெண்கள் என மொத்தம் 81 ஆயிரத்து 581 வாக்காளர்கள் உள்ளனர்.

திருத்தம்

இந்த வாக்காளர் பட்டியலில் தங்களது பெயரை சேர்ப்பதற்கான விண்ணப்பமோ அல்லது பதியப்பட்டுள்ள ஒரு பெயருக்கோ, பட்டியலில் கண்ட விவரம் குறித்தோ மறுப்பு தெரிவிக்க விரும்புவோர் நாகை உதவி கலெக்டர் அலுவலகத்தில் உள்ள சட்டமன்ற தொகுதி வாக்காளர் பதிவு அதிகாரியிடம் தெரிவித்து, 1950-ம் ஆண்டு மக்கள் பிரதிநிதித்துவ சட்டம் மற்றும் 1960-ம் ஆண்டு வாக்காளர் பதிவு விதிகளின்படி தகுந்த மாற்றத்தை மேற்கொள்ளலாம். நகராட்சி வார்டு உறுப்பினர் தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் செய்ய குறிப்பிடப்படும் இறுதிநாள் வரை, வாக்காளர் பட்டியலில் மாற்றத்திற்காக வரப்படும் கோரிக்கைகள் மற்றும் மறுப்புகள் குறித்து சட்டமன்ற தொகுதிக்கான வாக்காளர் பதிவு அதிகாரி மூலம் திருத்தம் செய்யப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

இதில் நகராட்சி பணியாளர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்