நாம் அனைவரும் இணைந்து பணியாற்றினால் புதுவையை ஓரிரு மாதத்தில் வளர்ச்சி பாதைக்கு கொண்டு செல்லலாம்
நாம் அனைவரும் இணைந்து பணியாற்றினால் புதுவையை ஓரிரு மாதத்தில் வளர்ச்சி பாதைக்கு கொண்டு செல்லலாம் என்று எம்.எல்ஏ.க்களுக்கு கவர்னர் கிரண்பெடி கடிதம் எழுதியுள்ளார்.
புதுச்சேரி,
யூனியன் பிரதேச சட்டப்படி தனக்கே முழு அதிகாரம் உள்ளது என்று கவர்னர் கிரண்பெடி கூறி வருகிறார். யூனியன் பிரதேசமாக இருந்தாலும் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டமன்றம் இருக்கும்போது மக்கள் பிரதிநிதிகளுக்கே அதிகாரம் என அமைச்சர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இரு தரப்பினரும் மத்திய அரசிடம் ஒருவரை ஒருவர் புகார் தெரிவித்து வருகின்றனர்.
ஆனால் மத்திய அரசு இந்த விஷயத்தில் நேரடியாக தலையிடவில்லை. இருப்பினும் கவர்னருக்கு முழு அதிகாரம் இருப்பதாக மத்திய உள்துறை அமைச்சகம் சமீபத்தில் முதல்–அமைச்சர் நாராயணசாமிக்கு கடிதம் அனுப்பியது. இந்த நிலையில் தன்னுடைய அதிகாரத்தை ஒப்புக்கொண்டு ஒத்துழைப்பு தரும்படி கவர்னர் கிரண்பெடி புதுவை எம்.எல்.ஏ.க்களுக்கு கடிதம் எழுதியுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:–
கவர்னர் மாளிகை மக்கள் பணியை செய்வது எல்லோருக்கும் ஏன் எரிச்சலூட்டுகிறது என்று தெரியவில்லை. யூனியன் பிரதேச சட்டத்தின்படி கோப்புகளுக்கு கவர்னரின் அனுமதி தேவை என்பதால் கவர்னர் மாளிகைக்கு பல கோப்புகள் வருகின்றன. சில கோப்புகள் தான் மேலும் தகவலுக்காக நிறுத்தி வைக்கப்படுகிறது. கவர்னரின் முடிவு இறுதி என சட்டம் சொல்கிறது. முதல்–அமைச்சர், அமைச்சர்களுக்கு அதிகாரம் இருக்கிறது என்றால் அதைவிட கவர்னருக்கு அதிக அதிகாரம் உள்ளது. இதனை மக்கள் பிரதிநிதிகள் ஒத்துக்கொண்டு மதிக்க வேண்டும்.
தொடர்ந்து என்னிடம் வாக்குவாதம் செய்து கொண்டிருந்தால் நம்முடைய சக்திதான் வீணாகும். அதுபோல் வீணாகும் சக்தியை மக்கள் நன்மைக்காக பயன்படுத்தலாம். உள்துறை மந்திரிக்கு இது தொடர்பாக கடிதம் எழுதினோம். எம்.எல்.ஏ.க்களின் பொறுப்பு, கவர்னரின் வேலை ஆகியவற்றை உள்துறை அமைச்சகம் ஏற்கனவே சொல்லிவிட்டது. வாய்க்கால் அடைப்பு, தூர்ந்துபோன குளத்தை பார்வையிடுதல் கவர்னரின் வேலைதான். பொதுமக்களை சந்தித்து குறைகளை ஏன் கேட்கக்கூடாது?
கவர்னரை ஏன் பொதுமக்கள் பார்க்கின்றனர்? அதேவேளையில் தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிகளை ஏன் பார்க்கவில்லை? என்பதை நாம் சிந்திக்க வேண்டும். மக்கள் பிரதிநிதிகள், அதிகாரிகளுடன் சென்று மக்களின் குறைகளை கேட்டிருந்தால் இந்த அளவுக்கு பிரச்சினைகள் வந்திருக்காது. வார ஆய்வின்போது மக்கள் பிரதிநிதிகளை அழைத்தேன். அவர்கள் வரவில்லை என்றால் என்னால் என்ன செய்ய முடியும். மூத்த அதிகாரிகள்கூட மக்களை சந்தித்து குறைகளை கேட்க மறுக்கின்றனர்.
மக்கள் பிரதிநிதியாகிய நீங்கள் உங்கள் கடமைகளை செய்யுங்கள். மக்கள் பணம் விஷயத்தில் எச்சரிக்கையாக இருங்கள். ஏமாற்றினால் தண்டிக்கப்படுவீர்கள். முதலில் தொகுதிக்கு செல்லுங்கள். மக்களின் குறைகளை தீர்த்துவையுங்கள். நாம் எல்லோரும் இணைந்து பணியாற்றினால் ஓரிரு மாதங்களில் புதுவையை வளர்ச்சிப்பாதைக்கு கொண்டு செல்லலாம். மக்களும் இதைத்தான் எதிர்பார்க்கின்றனர். இப்படி செய்தால் நம்மிடையே மோதல் ஏன் வரப்போகிறது.
இவ்வாறு அந்த கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.