ஆனிதிருமஞ்சனத்தையொட்டி விசுவநாதர் கோவிலில் நடராஜருக்கு சிறப்பு அபிஷேகம்

ஆனிதிருமஞ்சனத்தையொட்டி விசுவநாதர் கோவிலில் நடராஜருக்கு சிறப்பு அபிஷேகம்

Update: 2017-07-01 22:30 GMT
தா.பழூர்,

அரியலூர் மாவட்டம் தா.பழூரில் விசுவநாதர் சமேத விசலாட்சி அம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில் ஆனி திருமஞ்சனத்தையொட்டி நடராஜர் சாமிக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. நடராஜருக்கு ஆண்டுதோறும் 6 அபிஷேகங்கள் நடைபெறுவது வழக்கம். இதில் ஆனிமாதம் நடைபெறும் ஆனி திருமஞ்சனமும், மார்கழி மாதத்தில் நடத்தப்படும் ஆரூத்ரா அபிஷேக தரிசனமும் மிகவும் சிறப்பு வாய்ந்ததாகும். இதைத்தொடர்ந்து நேற்று முன்தினம் ஆனிதிருமஞ்சனத்தையொட்டி தா.பழூர் விசுவநாதர் சமேத விசாலாட்சி அம்மன் கோவிலில் உள்ள நடராஜர் மற்றும் சிவகாமி சுந்தரி அம்பாளுக்கு மஞ்சள், சந்தனம், களபம், விபூதி, பால், தயிர், பஞ்சாமிர்தம், தேன், இளநீர், பன்னீர் உள்ளிட்ட 16 வகையான வாசனை திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்றது. பின்னர் நடராஜருக்கு மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. அப்போது அங்கு கூடியிருந்த பக்தர்கள் நடராஜபெருமானை சிவாய நம... நமசிவாய நம... என்ற பக்தி கோஷங்களை எழுப்பினர். கோவிலில் சிவாலய தேவார திருமுறை வழிபாட்டு சிவனடியார்கள் திருஞானசம்மந்தம் உள்ளிட்ட பலர் தேவார திருப்பதிகங்களை பாடினர். பின்னர் பக்தர்கள் அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது. இதில் தா.பழூர் பகுதியை சேர்ந்த திரளான பக்தர்கள் பலர் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். 

மேலும் செய்திகள்