அரசு ஆஸ்பத்திரியில் பயனாளிகளுக்கு கருவிழி மாற்று அறுவை சிகிச்சை கலெக்டர் நலம் விசாரித்தார்

திருச்சி அரசு ஆஸ்பத்திரியில் அதிநவீன சிகிச்சை மூலம் கருவிழி மாற்று அறுவை சிகிச்சை செய்து கொண்ட பயனாளிகளை கலெக்டர் பார்த்து நலம் விசாரித்தார்.

Update: 2017-07-01 22:45 GMT
திருச்சி,

திருச்சி அரசு ஆஸ்பத்திரி கண் வங்கி சார்பில் முதன்முறையாக அதிநவீன சிகிச்சை மூலம் கருவிழி மாற்று அறுவை சிகிச்சை செய்து கொண்டு பார்வை பெற்ற பயனாளிகளான திருச்சி மதுரை ரோட்டை சேர்ந்த நஜீமுனிசா(வயது 60), நாகமங்கலம் மேக்குடியை சேர்ந்த பழனியாண்டி(60) மற்றும் முதல்-அமைச்சரின் விரிவான காப்பீட்டு திட்டத்தின்கீழ் வாய் பேச, காது கேட்க இயலாத குழந்தைகளுக்கு மேற்கொள்ளப்படும் அறுவை சிகிச்சை மூலம் ‘காக்ளியர் இம்பிளாண்ட்’ கருவி பொருத்தப்பட்டுள்ள குழந்தைகளை கலெக்டர் ராஜாமணி பார்த்து நலம் விசாரித்தார். அப்போது அந்த குழந்தைகளை அவர் தூக்கி கொஞ்சி மகிழ்ந்தார்.

இதையொட்டி நடைபெற்ற விழாவில் கலெக்டர் ராஜாமணி பேசியதாவது:-

திருச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு தேவையான உபகரணங்கள் வாங்குவதற்கு புதிய கருத்துரு தயார் செய்யப்பட்டுள்ளது. அதேபோல கழிவுகளை அகற்ற ரூ.1½ கோடி மதிப்பில் மருத்துவக்கழிவு சுத்திகரிப்பு நிலையம் அமைப்பதற்கு கருத்துரு தயார் செய்யப்பட்டு அரசு அனுமதி கிடைத்தவுடன் நிறைவேற்றப்படும். மருத்துவக்கல்லூரியில் பிற்படுத்தப்பட்டோர் மாணவர்களுக்கான விடுதிக்கு தேவையான இடம் வழங்கி விரைவில் விடுதி கட்டும் பணி தொடங்கப்படும்.

அரசு ஆஸ்பத்திரிகள்

மணப்பாறை, முசிறி அரசு ஆஸ்பத்திரிகள் மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்களில் தேவையான வசதிகள் மேம்படுத்தப்படும். ஆரோக்கியமான முன்மாதிரி மாவட்டமாக திருச்சியை மாற்றுவதற்கு அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

விழாவில் அரசு ஆஸ்பத்திரி யின் ‘டீன்’ (பொறுப்பு) டாக்டர் அனிதா, மருத்துவமனை இருக்கை அதிகாரி(ஆர்.எம்.ஒ.) டாக்டர் கருணாகரன், மருத்துவமனை கண்துறை பேராசிரியரும், துறைத்தலைவருமான டாக்டர் பார்த்திபன் புருஷோத்தமன், காது, மூக்கு, தொண்டை பிரிவின் துறைத்தலைவர் டாக்டர் பழனியப்பன் உள்பட பலர் கலந்து கொண்டனர். முன்னதாக உலக மருத்துவர்கள் தினத்தையொட்டி தமிழக அரசின் சார்பில் சிறந்த டாக்டர்களாக தேர்வு செய்யப்பட்ட திருச்சி அரசு ஆஸ்பத்திரியின் ‘டீன்’ (பொறுப்பு) டாக்டர் அனிதா, டாக்டர்கள் பிரசன்னலட்சுமி, செந்தில்குமார் ஆகியோர் கலெக்டரிடம் வாழ்த்து பெற்றனர்.

மேலும் செய்திகள்