தடையின்றி குடிநீர் வினியோகம் செய்யக்கோரி காலி குடங்களுடன் பெண்கள் சாலை மறியல்

தடையின்றி குடிநீர் வினியோகம் செய்யக்கோரி காலி குடங்களுடன் பெண்கள் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் கள்ளக்குறிச்சி–சேலம் சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Update: 2017-07-01 22:30 GMT

கள்ளக்குறிச்சி,

கள்ளக்குறிச்சி நகராட்சிக்குட்பட்ட 13–வது வார்டில் ஏமப்பேர் பகுதி உள்ளது. இங்கு ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு நகராட்சி சார்பில் ஏமப்பேர் பஸ் நிறுத்தம் அருகே உள்ள கிணற்றில் இருந்து மின்மோட்டார் மூலம் மேல்நிலை நீர்த்தேக்கத்தொட்டிக்கு தண்ணீர் ஏற்றப்பட்டு குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வந்தது.

இந்த நிலையில் கடந்த ஒரு வாரத்துக்கு முன்பு குடிநீர் கிணற்றின் மின்மோட்டார் திடீரென பழுதானது. இதன் காரணமாக ஏமப்பேர் பகுதி மக்களுக்கு குடிநீர் வினியோகம் செய்யப்படவில்லை. இதனால் அங்கு குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டது. இதுபற்றி அப்பகுதி மக்கள் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் முறையிட்டும் எந்த பயனுமில்லை.

இதனால் ஆத்திரமடைந்த பெண்கள் காலி குடங்களுடன் நேற்று காலை 11 மணியளவில் ஏமப்பேர் பஸ் நிறுத்தம் அருகே திரண்டனர். பின்னர் அவர்கள் தங்களுக்கு தடையின்றி தினமும் குடிநீர் வினியோகம் செய்யக்கோரியும், பழுதடைந்த மின்மோட்டாரை உடனே சீரமைக்கக்கோரியும் கோ‌ஷங்கள் எழுப்பியபடி திடீரென சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

இதுபற்றி தகவல் அறிந்த கள்ளக்குறிச்சி போலீஸ் சப்–இன்ஸ்பெக்டர் விஸ்வநாதன் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து, போராட்டத்தில் ஈடுபட்ட பெண்களிடம் நகராட்சி அதிகாரிகளிடம் பேசி, குடிநீர் வினியோகம் செய்ய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தனர். இதனை ஏற்ற பெண்கள் காலை 11.30 மணியளவில் மறியலை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர்.

இந்த சம்பவத்தால் கள்ளக்குறிச்சி–சேலம் சாலையில் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

மேலும் செய்திகள்