கோவில்பட்டி அருகே பள்ளிக்கூட பெண் சமையலர் கிணற்றில் பிணமாக மிதந்தார் போலீசார் விசாரணை

கோவில்பட்டி அருகே பள்ளிக்கூட பெண் சமையலர் கிணற்றில் பிணமாக மிதந்தார். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Update: 2017-07-01 20:00 GMT

கோவில்பட்டி,

கோவில்பட்டி அருகே பள்ளிக்கூட பெண் சமையலர் கிணற்றில் பிணமாக மிதந்தார். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

பள்ளிக்கூட சமையலர்

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே உள்ள செண்பகபேரியைச் சேர்ந்தவர் அய்யாத்துரை. கட்டிட தொழிலாளி. இவருடைய மனைவி முத்துமாரி (வயது 49). இவர் மேல பாண்டவர்மங்கலம் அரசு உதவி பெறும் பள்ளிக்கூடத்தில் சமையலராக வேலை செய்து வந்தார். இவர் கடந்த சில நாட்களாக உடல்நலம் பாதிக்கப்பட்டு இருந்தார். இதனால் அவர் வேலைக்கு செல்லாமல் மருத்துவ விடுப்பில் இருந்தார்.

இந்த நிலையில் நேற்று முன்தினம் மதியம் முத்துமாரி குப்பைகளை கொட்டுவதற்காக வீட்டில் இருந்து வெளியே சென்றார். பின்னர் அவர் நீண்ட நேரமாகியும் வீட்டுக்கு திரும்பி வரவில்லை. எனவே இரவில் அவரை குடும்பத்தினர் தேடினர். அப்போது அங்குள்ள தோட்டத்தில் உள்ள கிணற்றில் முத்துமாரி பிணமாக மிதந்தார்.

போலீசார் விசாரணை

இதுகுறித்து தகவல் அறிந்ததும், கோவில்பட்டி தீயணைப்பு நிலைய அதிகாரி வீரலட்சுமணன் தலைமையில் தீயணைப்பு வீரர்கள் விரைந்து சென்று, கிணற்றில் இறங்கி முத்துமாரியின் உடலை மீட்டனர். கோவில்பட்டி மேற்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜேஷ் மற்றும் போலீசார் முத்துமாரியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கோவில்பட்டி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். முத்துமாரி குப்பைகளை கொட்ட சென்றபோது கிணற்றில் தவறி விழுந்து இறந்தாரா? அல்லது தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என பல்வேறு கோணங்களில் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்