சரக்கு, சேவை வரிக்கு எதிர்ப்பு: கருப்பு கொடி ஏற்றி வியாபாரிகள் போராட்டம் எல்.ஐ.சி. முகவர்கள் ஆர்ப்பாட்டம்

சரக்கு, சேவை வரிக்கு எதிர்ப்பு தெரிவித்து கருப்பு கொடி ஏற்றி வியாபாரிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். எல்.ஐ.சி. முகவர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

Update: 2017-07-01 21:00 GMT

நெல்லை,

சரக்கு, சேவை வரிக்கு எதிர்ப்பு தெரிவித்து கருப்பு கொடி ஏற்றி வியாபாரிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். எல்.ஐ.சி. முகவர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

கருப்பு கொடி

நாடு முழுவதும் மத்திய அரசு ஜி.எஸ்.டி. எனப்படும் சரக்கு, சேவை வரியை அமல்படுத்தி உள்ளது. இதற்கு பல்வேறு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்து உள்ளனர். வியாபாரிகள் சங்கங்கள் சார்பில் போராட்ட அறிவிப்புகளும் வெளியிடப்பட்டன.

இதையொட்டி பாளையங்கோட்டை மார்க்கெட் வாசல்களில் கருப்பு கொடி தோரணம் கட்டப்பட்டு இருந்தது. மேலும் அங்கு கொடிக்கம்பம் நட்டு அதில் கருப்பு கொடி ஏற்றப்பட்டது.

ஆர்ப்பாட்டம்

பாளையங்கோட்டை சமாதானபுரத்தில் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை சார்பில் கருப்பு கொடி ஏற்றி போராட்டம் நடத்தினர். இதில் சங்க மாவட்ட செயலாளர் ராமகிருஷ்ணன், மாநகர தலைவர் சாலமோன், செயலாளர் அருள் இளங்கோ, பொருளாளர் சங்கர நாராயணன், சமாதானபுரம் வியாபாரிகள் சங்க தலைவர் சேகர், பொருளாளர் இசக்கி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

ஆனால் நெல்லையில் பெரும்பாலான கடைகள் நேற்று வழக்கம் போல் திறந்து இருந்தன. ஆங்காங்கே ஒருசில கடைகள் மட்டுமே மூடப்பட்டு இருந்தன. பாளையங்கோட்டை, டவுன் மார்க்கெட்டுகள், நயினார்குளம் காய்கறி மொத்த மார்க்கெட் ஆகியவை வழக்கம் போல் செயல்பட்டன. இதனால் பொது மக்களுக்கு எந்த பாதிப்புகளும் ஏற்படவில்லை.

சரக்கு, சேவை வரியால் ஒருசில வீட்டு உபயோக பொருட்களின் விலை அதிகரிக்கும் என்று கூறப்படுவதால், ஒருசில கடைகளில் நேற்று முன்தினம் இரவு நீண்ட நேரம் வியாபாரம் நடந்துள்ளது. அங்கு குளிர்சாதன பெட்டிகள் உள்ளிட்ட பொருட்களை வாடிக்கையாளர்கள் வாங்கிச் சென்றுள்ளனர்.

எல்.ஐ.சி. முகவர்கள்

சரக்கு, சேவை வரிக்கு எல்.ஐ.சி. காப்பீட்டு முகவர்கள் சங்கத்தினரும் எதிர்ப்பு தெரிவித்து உள்ளனர். இதையொட்டி நேற்று கிளை அலுவலகங்கள் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தினர். எல்.ஐ.சி. பாலிசிதாரர்களுக்கு, அவர்கள் செலுத்தும் பிரிமீய தொகைக்கு வரியை உயர்த்தி இருப்பதை கைவிட வேண்டும் என்று வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

பாளையங்கோட்டை அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு கிளை தலைவர் சுப்பிரமணியன் தலைமை தாங்கினார். செயலாளர் குமார், பொருளாளர் அரிகரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கோட்ட தலைவர் சக்கரவர்த்தி ராஜூ, தென் மண்டல துணை தலைவர் கணபதி, ஊழியர் சங்க கோட்ட தலைவர் மதுபால், எல்.ஐ.சி. ஊழியர் சங்க கோட்ட தலைவர் மதுபால், ஊழியர் சங்க கிளை தலைவர் ராதாகிருஷ்ணன், செயலாளர் முத்துராஜ் மற்றும் பலர் கலந்து கொண்டனர். இதேபோல் நெல்லை டவுன் கிளை உள்ளிட்ட கிளை அலுவலகங்கள் முன்பு நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

மேலும் செய்திகள்