காடை வளர்த்தால் காசு கொட்டும்

அசைவ பிரியர்கள் ஆடு, கோழி, மீன் வகை உணவுகளை விரும்பி சாப்பிடுவார்கள். தற்போது காடையும் விரும்பி சாப்பிடப்படுகிறது.

Update: 2017-07-02 02:45 GMT
சைவ பிரியர்கள் ஆடு, கோழி, மீன் வகை உணவுகளை விரும்பி சாப்பிடுவார்கள். தற்போது காடையும் விரும்பி சாப்பிடப்படுகிறது. இந்த காடைகளின் பூர்வீகம் ஜப்பான். இதனை வளர்ப்பதன் மூலம் நல்ல லாபம் ஈட்டலாம்.

சிறிய முதலீட்டில் இந்த தொழிலை மேற்கொள்ளலாம். குறைந்த இடவசதி, வேகமான வளர்ச்சி, தடுப்பூசிகளே அளிக்கப்படாத எளிய பராமரிப்பு, விரைவான இனப் பெருக்கம், மிக குறுகிய காலத்திலேயே லாபம் சம்பாதித்தல் போன்ற காரணங்களால் இந்த தொழிலுக்கு பெரும் வரவேற்பு இருக்கிறது.

கடலூர் மாவட்டம் நெல்லிக்குப்பம் அருகே சின்ன பகண்டை கிராமத்தில் வசிக்கும் பாஸ்கர், கிருஷ்ணவேணி தம்பதியினர் ஜப்பானிய காடை வளர்ப்பில் ஈடுபடுகிறார்கள். பாஸ்கர் எம்.எஸ்சி படித்திருக்கிறார். கிருஷ்ணவேணி பிளஸ்–2 படித்து இருக்கிறார்.

ஜப்பானிய காடை...! வெளிநாட்டு பெயரோடு திகழ்கிறதே! அதுபற்றி முழுமையாக அறிந்து கொள்ள காடை வளர்க்கும் தம்பதிகளிடம் பேசினோம்!

பாஸ்கர் சொல்கிறார்:

‘‘நாங்கள் முதலில் வான்கோழி வளர்த்தோம். அதில் நஷ்டம் ஏற்பட்டது. பின்னர் தலைச்சேரி ஆடு வளர்க்க ஆரம்பித்தோம். ஆடுகள் கொழுத்தால் அதிக லாபம் என்றனர், ஆனால் கொழுத்த நஷ்டம் தான் ஏற்பட்டது. ஆனாலும் பிராணிகளை வளர்க்கும் ஆர்வம் குறையவில்லை. நாட்டுக்கோழிகளை வளர்க்க தொடங்கினோம், அதிலும் பிரச்சினைகளைதான் எதிர்கொள்ள வேண்டி யிருந்தது. அதன்பின்னர் மாடு வளர்க்க தொடங்கினோம். அப்போது தான் ஜப்பானிய காடை வளர்ப்பு பற்றி கேள்விப்பட்டோம்.

குறைந்த முதலீடு, எளிமையான பராமரிப்பு முறைகள் காடை வளர்ப்பு மீது ஆர்வம் கொள்ள செய்தது. கண்ணதாசன் என்பவரிடம் இருந்து காடை குஞ்சுகளை வாங்கி வளர்க்க தொடங்கினோம். இப்போது எங்களுடைய பண்ணையில் மாதம் 5 ஆயிரம் குஞ்சுகள் வளர்க்கிறோம். இடைத்தரகர்கள் இல்லாத தொழிலாக இருப்பதால் உற்பத்தியாளர்களால் முழு லாபத்துடன் விற்பனை செய்ய முடியும். ஒரு காடையை 7 ரூபாய் கொடுத்து வாங்கி வளர்த்து, இறைச்சிக்காக ரூ.27–க்கு விற்பனை செய்கிறோம். இதில் தீவன செலவு, பராமரிப்பு செலவு தவிர்த்து ஓரளவு லாபம் கிடைக்கிறது. மாதம் ரூ.20 ஆயிரம் வரைக்கும் சம்பாதிக்கிறோம்’’ என்கிறார்.

 பாஸ்கரின் மனைவி கிருஷ்ணவேணி முழுநேரமாக பண்ணையை பராமரித்து வருகிறார். அவர் சொல்கிறார்:

‘‘வீட்டில் இருக்கும் குடும்பத்தலைவிகள் காடை வளர்ப்பு தொழிலில் ஈடுபடலாம். காடைகளுடன் பொழுதை நிம்மதியாக கழிப்பதுடன் லாபத்தையும் ஈட்டலாம். அவைகளின் பராமரிப்பில் கவனம் செலுத்துவதால் தேவையில்லாத எதிர்மறை எண்ணங்கள், மனக்   கவலை, மன அழுத்தம் எதுவும் எட்டிப்பார்ப்பதில்லை. எனது கணவர் படித்துவிட்டு, காடை வளர்ப்பில் ஈடுபட்டுள்ளாரே என்பதில் எனக்கு வருத்தமே கிடையாது.

காடை வளர்ப்பு தொழிலில் ஈடுபடுவதற்கு முன்பாக, அத்தியாவசிய தேவைகளுக்கு யாரிடமாவது கடன் வாங்க வேண்டிய நிலையில் இருந்தோம். பின்னர் பெற்ற கடனை திருப்பி கொடுக்க சிரமப்பட்டோம். வெறுமனே வீட்டிலேயே இருந்து கடன்காரனாக மாறுவதை விட, நம்மால் முடிந்த வரையில் உழைத்து நமது தேவையை நாமே பூர்த்தி செய்து கொள்ள வேண்டும் என்ற எண்ணத்தில் இந்த சுய முதலீடு தொழிலில் குடும்பத்துடன் ஈடுபட்டு வருகிறோம். அனுபவம்தான் இந்த தொழிலுக்கு சிறந்த பயிற்சியாகும். அரசும் இந்த தொழிலை ஊக்குவிக்கிறது. காடைகளை இறைச்சிக்காக மட்டும் வளர்ப்பதோடு நிறுத்திக்கொள்ளாமல், முட்டை உற்பத்தி செய்து குஞ்சுகளை விற்பனை செய்து வந்தால் அதிக லாபம் ஈட்டலாம்’’ என்கிறார்.  

வடலூர் அருகே உள்ள ஆபத்தானபுரம் பகுதியை சேர்ந்த கண்ணதாசனும், அவரது மனைவி கவிதாவும் ஜப்பானிய காடை வளர்ப்பில் சாதித்து வருகிறார்கள். இருவரும் பிளஸ்–2 வரை படித்துள்ளனர். காடை வளர்ப்பு அனுபவம் குறித்து கண்ணதாசன் சொல்கிறார்:


‘‘நான் 15 ஆண்டுகளுக்கு மேலாக இந்த தொழிலில் ஈடுபட்டு வருகிறேன். காடை என்றால் என்ன என்றே தெரியாத நிலையிலும், தன்னம்பிக்கையுடன் தொழிலில் இறங்கினேன். எனது மனைவியும் எனக்கு உதவியாக இருந்தார். காடை வளர்ப்புக்கென தனியாக பயிற்சி எதுவும் எடுத்துக்கொள்ளவில்லை. நானும் எனது மனைவியும் அனுபவரீதியாக தெரிந்து கொண்டவைகள்தான்.

பிராய்லர் கோழி, நாட்டுக்கோழி வளர்ப்புடன் தொடர்புடையது தான் இந்த காடை வளர்ப்பும். காடையை பொறுத்த வரைக்கும் குஞ்சு பொரிக்கும் காலத்தில் 6 முதல் 7 நாட்களுக்கு மின்சாரம் மூலம் சரியான வெப்பநிலையை கொடுக்க வேண்டும். முட்டை களை இன்குபேட்டர்களில் வைத்திருக்கும் போது கவனத்துடன் இருக்க வேண்டும். குஞ்சு பொரித்த பின்னர் ஒரு மாத காலத்தில் காடையை விற்பனை செய்து விடலாம். இந்த தொழிலை யார் செய்தாலும், அதில் முழு விருப்பம் இருந்தால் நிச்சயம் வெற்றிபெறலாம். நஷ்டம் வருவதற்கான வாய்ப்புகள் கிடையாது’’ என்கிறார்.

கணவருடன் இணைந்து காடை வளர்ப்பில் முழுமூச்சுடன் ஈடுபட்டு வரும் கவிதா, அவைகளை பராமரிப்பதில் இருக்கும் நடைமுறை சிக்கல் களை விளக்குகிறார்.

‘‘இயற்கை பேரிடர் மற்றும் மின்சாரம் துண்டிக்கப்பட்டால் தான் பாதிப்பு ஏற்படும். தானே புயலின் போது பெரிய அளவில் பாதிப்பு ஏற்பட்டு நஷ்டம் ஏற்பட்டது. நஷ்டம் ஏற்பட்டதால் இந்த தொழிலை நாங்கள் விட்டு செல்லவில்லை. மீண்டும் உத்வேகத்துடன் தொழிலை தொடர்ந்தோம். முழுநேரமும் இதைத்தான் கவனித்து வருகிறோம். கோவில், உறவினர் வீட்டு திருமணத்திற்கு சென்று வெளியூர்களில் நாங்கள் தங்குவது கிடையாது. அப்படியொரு சூழ்நிலை ஏற்பட்டால் காடைகளை கவனிக்க சரியான ஒரு ஆளை நியமித்துவிட்டு தான் செல்ல வேண்டும். இளஞ்சியம் என்ற பெண் வேலை பார்க்கிறார். ஆனாலும் காடைகளை சரியாக கவனிப்பதற்காக நாங்கள் எந்த ஒரு விழாவுக்கு சென்றாலும் ஏதேனும் காரணத்தை சொல்லி விட்டு உடனே கிளம்பி வந்துவிடுவோம்.

ஒருநாள் இரவு திடீரென மின்சாரம் துண்டிக்கப்பட்டது. இதனால் இன்குபேட்டர்களில் முட்டைகளில் இருந்து வெளிவரும் நிலையில் இருந்த காடை குஞ்சுகளுக்கு சரியான வெப்பம் கிடைக்காததால்  செத்துப் போனது. மின்சாரம் துண்டிக்கப்பட்ட 20 நிமிடத்திற்குள் மின்சார வசதி செய்து கொடுக்காவிட்டால் இழப்புகள் ஏற்பட்டுவிடும். புரோட்டின் சத்து அதிகமாக இருப்பதாலும், இந்த இறைச்சியால் எந்தவித பாதிப்பும் இல்லை என்பதாலும் அனைவராலும் காடை விரும்பி சாப்பிடப்படுகிறது’’ என்கிறார், கவிதா.

காடை வளர்ப்பு பெண்களுக்கு ஏற்ற தொழில்!

மேலும் செய்திகள்