ஆயுளை அறியும் தொழில்நுட்பம்
ஒருவரின் ஆயுளை அறிய புதிய செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.
ஒருவர் எத்தனை ஆண்டு காலம் வாழ்வார் என்று கணிப்பது கடினம்.
தெற்கு ஆஸ்திரேலியாவில் உள்ள அடிலெய்டு பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள்தான் இந்தப் புது தொழில்நுட்பத்தை உருவாக்கியுள்ளனர்.
இந்தத் தொழில்நுட்பம், மனித உறுப்புகளை சி.டி. ஸ்கேன் மூலம் புகைப்படம் எடுத்து வைத்து அதை ஆராய்ந்து, அவர் இன்னும் எத்தனை ஆண்டுகாலம் உயிருடன் இருப்பார் என்பதை கணக்கிட்டுக் கூறுகிறது.
இந்த செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தின் முடிவை மருத்துவர்கள் அளிக்கும் முடிவுகளோடு ஒப்பிட்டுப் பார்க்கையில் அது 69 சதவீதம் துல்லியமாக இருந்தது தெரியவந்தது.
இந்தக் கண்டுபிடிப்புக் குழுவில் உள்ள லுக் ஒக்டென்ரேனர் கூறுகையில், ஒருவரின் உடலில் வருங்காலத்தில் ஏற்படும் மாற்றங்களை கணிப்பது மிகவும் உபயோக மானது. ஏனெனில் அதற்குச் சிகிச்சையளிக்க மருத்துவர்களுக்கு மிகவும் உதவியாக இருக்கும்.
அதிலும் ஒருவர் எவ்வளவு ஆண்டுகாலம் வாழ்வார் என்பதை மருத்துவர் கண்டுபிடிப்பது கடினம். அந்த வகையில் ஒருவரின் உடலுக்குள் ஒவ்வோர் உறுப்பின் ஆரோக்கியத்தையும் கண்டுபிடிக்க இந்தத் தொழில்நுட்பம் உதவியாக இருக்கும்.
எங்களின் இந்த ஆராய்ச்சியானது மருத்துவப் பட பகுப்பாய்வுத் துறையில் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தின் ஒரு புதிய வாயிலைத் திறந்துள்ளது.
வருங்காலத்தில் இந்தத் தொழில்நுட்பம், நோய்களை வரும் முன்பே கண்டறிந்து, அதற்கான சிகிச்சையை முன்கூட்டியே அளிக்க உதவும் என்று ஒக்டென்ரேனர் தெரிவித்துள்ளார்.