மேகதாதுவில் புதிய அணை கட்ட அனுமதி கோரி கர்நாடக அரசு திட்ட அறிக்கையை மத்திய அரசுக்கு அனுப்பியது
காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாதுவில் புதிய அணை கட்ட அனுமதி கோரி, அதற்கான திட்ட அறிக்கையை மத்திய அரசுக்கு கர்நாடகம் அனுப்பி வைத்துள்ளது.
பெங்களூரு,
காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாதுவில் புதிய அணை கட்ட அனுமதி கோரி, அதற்கான திட்ட அறிக்கையை மத்திய அரசுக்கு கர்நாடகம் அனுப்பி வைத்துள்ளது.
காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாது என்ற இடத்தில் ரூ.5,912 கோடி செலவில் புதிய அணை கட்ட கர்நாடக அரசு முடிவு செய்துள்ளது. சுமார் 60 டி.எம்.சி.(ஒரு டி.எம்.சி. என்பது 100 கோடி கனஅடி) தண்ணீரை தேக்கி வைக்கும் அளவுக்கு இந்த அணை கட்டப்படும் என்று சொல்லப்படுகிறது. இதற்கு கர்நாடக மந்திரிசபை ஏற்கனவே நிர்வாக ஒப்புதல் வழங்கியுள்ளது. இதற்கு தமிழ்நாட்டில் கடும் எதிர்ப்பு வலுத்துள்ளது. எக்காரணம் கொண்டும் மேகதாதுவில் அணை கட்டக்கூடாது என்று தமிழக அரசு மற்றும் தமிழக அரசியல் கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன.தமிழகம் எவ்வளவு எதிர்ப்பு தெரிவித்தாலும், மேகதாதுவில் அணை கட்டும் முடிவில் இருந்து பின்வாங்க மாட்டோம் என்று கர்நாடக முதல்–மந்திரி சித்தராமையா ஏற்கனவே திட்டவட்டமாக கூறிவிட்டார். அங்கு புதிய அணை கட்டினாலும், தமிழகத்திற்கு காவிரி நடுவர் மன்ற தீர்ப்பின்படி வழங்க வேண்டிய தண்ணீரை வழங்குவோம் என்று கர்நாடக அரசு கூறியுள்ளது.
இதற்கிடையே கர்நாடக அரசு புதிய அணை கட்டுவதற்கான திட்ட அறிக்கையை தயாரித்துள்ளது. இந்த திட்ட அறிக்கை மத்திய நீர்வள ஆணையத்திற்கு கர்நாடக அரசு அனுப்பியுள்ளது. அத்துடன் மத்திய நீர் வள ஆணையத்துக்கு கர்நாடக அரசின் காவிரி நீர்ப்பாசன கழகம் ஒரு கடிதம் எழுதியுள்ளது. அதில் கூறி இருப்பதாவது:–காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாதுவில் ரூ.5,912 கோடியில் புதிய அணை கட்ட முடிவு செய்துள்ளோம். பெங்களூரு மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளுக்கு குடிநீர் வினியோகம் செய்யவும், அந்த அணையில் இருந்து வெளியேறும் நீரில் இருந்து 400 மெகாவாட் மின்சாரம் தயாரிக்கவும் திட்டமிட்டுள்ளோம். இந்த திட்டத்தை செயல்படுத்துவதற்கான விரிவான திட்ட அறிக்கையை நாங்கள் தயாரித்துள்ளோம். இதை உங்களுக்கு அனுப்பி வைத்துள்ளோம்.
தமிழ்நாட்டிற்கு வழங்க வேண்டிய மாதாந்திர அளவு தண்ணீர் எந்த தடையும் இல்லாமல் வழங்கப்படும். பெங்களூரு மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளுக்கு குடிநீருக்கு 16.10 டி.எம்.சி. தண்ணீர் பயன்படுத்தப்படும். காவிரி நடுவர் மன்ற தீர்ப்பில் கர்நாடகத்திற்கு 419 டி.எம்.சி. தண்ணீர் ஒதுக்கப்பட்டுள்ளது.இதில் கூடுதல் தண்ணீர் பங்கு 17.64 டி.எம்.சி. தண்ணீரும் சேர்ந்துள்ளது. இந்த தண்ணீரை குடிநீருக்கு பயன்படுத்திக்கொள்ள எந்த தொந்தரவும் இல்லை. கர்நாடக அரசின் இந்த திட்டத்திற்கு அனுமதி வழங்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.