சர்வதேச விமான நிலையத்தில் ரூ.19 கோடி போதைப்பொருட்கள் பறிமுதல்

மும்பை சர்வதேச விமான நிலையத்தில் ரூ.19 கோடி போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டது.

Update: 2017-06-30 21:18 GMT

மும்பை,

மும்பை சர்வதேச விமான நிலையத்தில் ரூ.19 கோடி போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டது. இதுதொடர்பாக வெளிநாட்டை சேர்ந்த 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

மும்பை சர்வதேச விமான நிலையத்தில் எத்தியோப்பியா நாட்டில் இருந்து வந்த விமானம் ஒன்று நேற்றுமுன்தினம் தரையிறங்கியது. அந்த விமானத்தில் அதிகளவில் போதைப்பொருள் கடத்தி வரப்படுவதாக மும்பை போதைப்பொருள் கட்டுப்பாட்டு பிரிவு அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

இதையடுத்து அதிகாரிகள் குறிப்பிட்ட விமானத்தில் வந்திறங்கிய பயணிகளின் உடைமைகளை சோதனை செய்தனர்.

இந்த சோதனையின் போது, கென்யா நாட்டில் இருந்து வந்த ஷோபி ஷிப்சா சோங்கே(வயது38) என்ற பயணியின் உடைமைகளை சோதனையிட்டபோது, மதுபாட்டில்கள் வைக்கப்பட்டிருந்த ஒரு அட்டை பெட்டிக்குள் அதிகளவில் டியூப் மாத்திரைகள்(கேப்சூல்) இருந்தன. அந்த டியூப் மாத்திரைகளை உடைத்து பார்த்தபோது, அவற்றுக்குள் கோகைன் என்ற போதைப்பொருள் அடைத்து வைக்கப்பட்டிருந்ததை கண்டுபிடித்தனர்.

மொத்தம் 164 டியூப் மாத்திரைகளில் போதைப்பொருள் அடைத்து வைக்கப்பட்டிருந்தது. அவை அனைத்தும் பறிமுதல் செய்யப்பட்டன. அந்த மாத்திரைகள் 2 கிலோ 700 கிராம் எடை கொண்டதாக இருந்தன. இவற்றின் மதிப்பு ரூ.16 கோடியே 20 லட்சம் என்பது தெரியவந்தது.

இதையடுத்து அந்த பெண் அதிரடியாக கைது செய்யப்பட்டார். விசாரணையில், கென்யாவில் இருந்து அந்த போதைப்பொருளை எத்தியோப்பியா வழியாக மும்பைக்கு கடத்திக்கொண்டு வந்ததாக தெரிவித்தார்.

இதற்கிடையில், டெல்லியில் இருந்து வந்து தரையிறங்கிய விமானத்தில் 23 கிலோ 800 கிராம் எடை கொண்ட அம்பட்டமைன் என்ற போதைப்பொருளை கடத்தி கொண்டு வந்த சாம்பியா நாட்டை சேர்ந்த சிர்வா ரிச்சர்டு சாகியோ(48) என்ற பயணி போதைப்பொருள் கட்டுப்பாட்டு பிரிவு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார்.

அவர் மும்பை வழியாக சாம்பியாவிற்கு அந்த போதைப்பொருளை கடத்திச்செல்ல இருந்தது தெரியவந்தது. அவரிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட போதைப்பொருளின் மதிப்பு ரூ.3 கோடி என அதிகாரிகள் தெரிவித்தனர். மேற்படி இரு சம்பவங்களிலும் பறிமுதல் செய்யப்பட்ட போதைப்பொருளின் மதிப்பு ரூ.19 கோடியே 20 லட்சம் ஆகும்.

மேலும் செய்திகள்