பராமரிப்பு பணி காரணமாக நாளை மின்சார ரெயில் போக்குவரத்தில் மாற்றம்
பராமரிப்பு பணி காரணமாக நாளை மின்சார ரெயில் போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
மும்பை,
பராமரிப்பு பணி காரணமாக நாளை மின்சார ரெயில் போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
மத்திய ரெயில்வே வழித்தடத்தில் உள்ள மாட்டுங்கா– முல்லுண்டு இடையே நாளை(ஞாயிற்றுக்கிழமை) காலை 11.30 மணி முதல் மாலை 4.30 மணி வரை ஸ்லோ வழிப்பாதையில் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. எனவே காலை 11.12 மணி முதல் மாலை 4.27 மணி வரை ஸ்லோ ரெயில்கள் அனைத்தும் மாட்டுங்கா– முல்லுண்டு இடையே விரைவு வழித்தடத்தில் இயக்கப்படும். இந்த ரெயில்கள் சயான், குர்லா, காட்கோபர், விக்ரோலி, பாண்டுப், முல்லுண்டு ஆகிய ரெயில் நிலையங்களில் நிற்கும். பிளாட்பார வசதி இல்லாததால் வித்யவிகார், காஞ்சூர்மார்க், நாகுர் ஆகிய ரெயில்நிலையங்களில் நிற்காது. பயணிகள் சி.எஸ்.டி. நோக்கி வரும் ஸ்லோ ரெயில்களில் மேற்கூறப்பட்ட ரெயில் நிலையங்களுக்கு செல்லலாம்.காலை 11.22 மணி முதல் பிற்பகல் 3.28 மணி வரை சி.எஸ்.டி. நோக்கி வரும் விரைவு மின்சார ரெயில்கள் அனைத்தும் தானேயில் இருந்து முல்லுண்டு, பாண்டுப், விக்ரோலி, காட்கோபர், குர்லா மற்றும் வழக்கமாக நிற்கும் ரெயில் நிலையங்களில் நின்று வரும். சி.எஸ்.டி.யில் இருந்து கிளம்பும் விரைவு மின்சார ரெயில்கள் அனைத்தும் காலை 10.48 மணி முதல் பிற்பகல் 2.54 மணி வரை காட்கோபர், விக்ரோலி, பாண்டுப், முல்லுண்டு மற்றும் வழக்கமாக நிற்கும் ரெயில் நிலையங்களில் நின்று செல்லும்.
துறைமுக வழித்தடத்தில் காலை 11.20 மணி முதல் மாலை 4.20 மணி வரை நெருல்– பன்வெல் இடையே பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. எனவே காலை 11.01 மணி முதல் மாலை 4.26 மணி வரை நெருலில் இருந்து பேலாப்பூர், பன்வெலுக்கும், காலை 11.14 மணி முதல் மாலை 4.15 மணி வரை பேலாப்பூர், பன்வெலில் இருந்து சி.எஸ்.டி.க்கும் ரெயில்சேவை இருக்காது.டிரான்ஸ்ஹார்பர் வழித்தடத்தில் காலை 11.42 மணி முதல் மாலை 4.04 மணி வரை நெருலில் இருந்து பேலாப்பூர், பன்வெலுக்கும், காலை 11.04 மணி முதல் மாலை 4 மணி வரை பன்வெல், பேலாப்பூரில் இருந்து தானேக்கும் ரெயில்கள் இயக்கப்படாது. எனினும் இந்த நேரத்தில் சி.எஸ்.டி.– நெருல், தானே– நெருல் இடையே சிறப்பு ரெயில்கள் இயக்கப்படும்.
இந்த தகவலை மத்திய ரெயில்வே வெளியிட்டுள்ளது.