மானிய விலையில் டீசல் வழங்காததை கண்டித்து விசைப்படகு மீனவர்கள் போராட்டம்

மானிய விலையில் டீசல் வழங்காததை கண்டித்து விசைப்படகு மீனவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2017-06-30 21:45 GMT

புதுச்சேரி,

புதுவையில் விசைப்படகு வைத்திருக்கும் மீனவர்களுக்கு மானிய விலையில் மாதந்தோறும் 4,500 லிட்டர் டீசல் வழங்கப்பட்டு வருகிறது. முகத்துவாரம் தூர்வாரும் பணி தாமதமானதால் மீனவர்களால் சில மாதங்கள் தொழிலுக்கு செல்ல முடியாத நிலை இருந்தது. தற்போது மீன்பிடி தடைக்காலம் முடிந்த நிலையில் 6 மாதங்களுக்கு பிறகு மீனவர்கள் மீன்பிடிக்க சென்று வருகின்றனர்.

இந்தநிலையில் மானிய விலையில் வழங்கி வந்த டீசல் தற்போது சரிவர வழங்கப்படவில்லை என்று கூறப்படுகிறது. இதனை கண்டித்தும் மானிய விலையில் டீசல் வழங்கக்கோரியும் விசைப்படகு மீனவர்கள் புதுவை தாவரவியல் பூங்கா வளாகத்தில் உள்ள மீன்வளத்துறை இயக்குனர் அலுவலகம் முன்பு போராட்டம் நடத்தினார்கள்.

அதன்பின் தேங்காய்த்திட்டு மீன்பிடி துறைமுக வளாகத்தில் உள்ள மீனவர் நலத்துறை அலுவலகத்துக்கு வந்தனர். அந்த அலுவலகத்தை பூட்டி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

சிலர் மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை என்றிருந்த பெயர்ப்பலகையில் மீனவர் அழித்துறை என்று எழுத்துகளை ஒட்டினார்கள். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.

இதற்கிடையே சிலர் பியூஸ் போன டியூப் லைட்டுகளையும் அலுவலகம் முன்பு போட்டு உடைத்துவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர்.

மேலும் செய்திகள்