புதுவை முன்னாள் எம்.எல்.ஏ. குருசாமி மரணம்

புதுவை முன்னாள் எம்.எல்.ஏ. குருசாமி நேற்று மரணமடைந்தார்.

Update: 2017-06-30 21:30 GMT

புதுச்சேரி,

புதுவை முன்னாள் எம்.எல்.ஏ.வும், தியாகியுமான குருசாமி நேற்று மரணமடைந்தார். அவருக்கு வயது 95. இவரது மனைவி பெயர் அம்மணியம்மாள். முன்னாள் அமைச்சர் பன்னீர்செல்வம், சுகாதாரத்துறை துணை இயக்குனர் டாக்டர் ரகுநாதன், குணசீலன் ஆகியோர் இவரது மகன்களாவர். இவருக்கு கமலாதேவி என்ற மகளும் உள்ளார்.

உடல்நிலை பாதிக்கப்பட்டிருந்த குருசாமி புதுவை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். நேற்று காலை அவர் மரணமடைந்தார். அவரது உடல் பவழக்காரன்சாவடியில் உள்ள அவரது இல்லத்தில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. இறுதி சடங்குகள் இன்று (சனிக்கிழமை) மாலை நடக்கிறது.

குருசாமி 1948–ம் ஆண்டு கம்யூனிஸ்டு கட்சியில் சேர்ந்தார். 1954 முதல் 1964 வரை விவசாயிகள் சங்க பொதுச்செயலாளராக பணியாற்றினார். முன்பு இருந்த புதுசாரம் தொகுதியில் போட்டியிட்டு 1959 முதல் 1963 வரை மக்கள் பிரதிநிதித்து சபையில் உறுப்பினராக இருந்தார். 1963 சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்டு 1968 வரை எதிர்க்கட்சி கொறடாவாகவும், மீண்டும் 1969 தேர்தலில் போட்டியிட்டு வெற்றிபெற்று எம்.எல்.ஏ.வாகவும் பணியாற்றி உள்ளார்.

1960 முதல் 1965 வரை இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் தமிழ்மாநிலக்குழு உறுப்பினராகவும், கட்சியின் தமிழ் மாநிலக்குழு உறுப்பினராகவும், கட்சி கட்டுப்பாட்டு குழு உறுப்பினராகவும் பதவி வகித்துள்ளார்.

மேலும் செய்திகள்