பண்ணைக்காடு பேரூராட்சி பகுதியில் வேகமாக பரவும் வைரஸ் காய்ச்சல்

பண்ணைக்காடு பேரூராட்சி பகுதிகளில் கடந்த 10 நாட்களில் மர்ம காய்ச்சலால் 300–க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

Update: 2017-06-30 22:30 GMT

பெரும்பாறை,

பண்ணைக்காடு பேரூராட்சி பகுதிகளில் கடந்த 10 நாட்களில் மர்ம காய்ச்சலால் 300–க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்கள், அங்குள்ள அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். அங்கு அவர்களை டாக்டர்கள் பரிசோதனை செய்த போது வைரஸ் காய்ச்சலால் பாதிக்கப்பட்டிருப்பது தெரியவந்தது.

இதையடுத்து அவர்களுக்கு தொடர்ந்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும் காய்ச்சல் பரவாமல் தடுக்க மருத்துவக்குழுவினர் பேரூராட்சி பகுதிகளில் முகாமிட்டு ஆய்வு மேற்கொண்டனர். அப்போது வைரஸ் காய்ச்சலை உருவாக்கும் கொசுக்கள் அங்கு உற்பத்தியாவது கண்டறியப்பட்டது. அதனை ஒழிக்கும் நடவடிக்கையில் மருத்துவக்குழுவினர் ஈடுபட்டுள்ளனர். காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிலவேம்பு கசாயம் வழங்கப்பட்டு வருகிறது.

இதுகுறித்து சுகாதாரத்துறை அதிகாரிகள் கூறுகையில், பண்ணைக்காடு பகுதியில் தற்போது வைரஸ் காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது. எனவே பொதுமக்கள் தண்ணீரை காய்ச்சி பயன்படுத்த வேண்டும். தண்ணீர் தொட்டிகளை திறந்த நிலையில் வைக்க கூடாது என்றனர். அப்பகுதி மக்கள் கூறும்போது, மருத்துவமனையில் படுக்கை வசதி இருந்தும் நேயாளிகளை தங்க வைப்பது இல்லை. வரும் நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்து அனுப்பி விடுகின்றனர். மருத்துவமனை சுகாதார கேடாக உள்ளது என்றனர்.

மேலும் செய்திகள்