நெய்வேலியில் இன்று என்.எல்.சி.யை கண்டித்து அரைநிர்வாண போராட்டம்

நெய்வேலியில் இன்று, என்.எல்.சி. கண்டித்து அரைநிர்வாண போராட்டம் நடத்துவது என்று சி.ஐ.டி.யு. தொழிற்சங்க கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.

Update: 2017-06-30 22:30 GMT

நெய்வேலி,

என்.எல்.சி.யில் அங்கீகரிக்கப்பட்ட தொழிற்சங்கங்களின் ஒன்றான சி.ஐ.டி.யு. தொழிற்சங்கத்தின் நிர்வாக குழு கூட்டம் நெய்வேலியில் உள்ள தொழிற்சங்க அலுவலகத்தில் நடைபெற்றது. இதற்கு தலைவர் வேல்முருகன் தலைமை தாங்கினர். பொது செயலாளர் ஜெயராமன் தொழிலாளர்களின் கோரிக்கைகள் குறித்து விளக்கம் அளித்து பேசினார்.

கூட்டதில், 2015–ம் ஆண்டு புதிய ஊதியமாற்ற ஒப்பந்தத்தை நடைமுறைப்படுத்தக்கோரி நடந்த வேலை நிறுத்த போராட்டத்தின் போது, 11 தொழிலாளர்கள் மற்றும் தொ.மு.ச. முன்னாள் தலைவர் திருமாவளவன் மீது என்.எல்.சி. நிர்வாகத்தால் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

நிர்வாகத்தின் நடவடிக்கையில் பாதிக்கப்பட்ட தொழிலாளர்களுக்கு குடும்ப நிவாரண நிதியை தொழிலாளர்களின் ஊதியத்தில் இருந்து பிடித்தம் செய்து வழங்குமாறு என்.எல்.சி. நிர்வாகத்திடம் தெரிவித்தும், அதற்கு அவர்கள் மறுப்பு தெரிவித்து விட்டனர். எனவே தொழிலாளர்களே நேரடியாக வசூல் செய்வது, இதற்காக வீடு, வீடாக சென்று நிதி வசூல் செய்திட முடிவு செய்யப்பட்டது.

தொழிலாளர்களுக்கு கடந்த 3 ஆண்டுகளாக வழங்கப்படாமல் உள்ள சீருடையை வழங்கிட வேண்டும், மழை கோட்டு, ஷூ ஆகியவற்றை என்.எல்.சி. நிர்வாகம் வழங்கிட கோரியும் இன்று (சனிக்கிழமை) மெயின்பஜார் காமராஜர் சிலை அருகே அரை நிர்வாண போராட்டம் நடத்துவது என்று தீர்மானிக்கப்பட்டது.

முன்னதாக நிர்வாக குழு கூட்டத்தில், வேலை நிறுத்த போராட்டத்தின் போது பாதிக்கப்பட்ட தொழிலாளர்களுக்கு குடும்ப நிவாரண நிதி வழங்குவதற்காக கூட்டத்திற்கு வந்திருந்த தொழிலாளர்கள் தங்களது பங்கு நிதியை வழங்கினர். இதில் மொத்தம் 34 ஆயிரம் வசூலானது. கூட்டத்தில் ஏராளமான தொழிலாளர்கள் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்