பெண்ணின் காதை அறுத்து நகை பறித்துச்சென்ற வாலிபர் கைது

ஆதம்பாக்கத்தில் காற்றுக்காக வீட்டின் கதவை திறந்து வைத்து படுத்திருந்த பெண்ணின் காதை அறுத்து நகை பறித்துச்சென்ற வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2017-06-30 23:00 GMT

ஆலந்தூர்,

சென்னையை அடுத்த ஆதம்பாக்கம் பெரியார் நகர் பகுதியை சேர்ந்தவர் ஏழுமலை (வயது 35). டிரைவர். இவரது மனைவி சுலோச்சனா (31). கடந்த மாதம் 1–ந்தேதி சுலோச்சனா வீட்டில் காற்றுக்காக திறந்து வைத்து தூங்கிக் கொண்டு இருந்தார். ஏழுமலை மாடிக்கு சென்றுவிட்டார்.

அப்போது நள்ளிரவில் வீட்டிற்குள் புகுந்த மர்மநபர் சுலோச்சனாவின் கழுத்தில் இருந்த தங்க சங்கிலியை பறிக்க முயன்றான். இதனால் தூக்கத்தில் இருந்து எழுந்த சுலோச்சனா சத்தம்போட முயன்றார். அப்போது அந்த நபர், சுலோச்சனாவை கத்தியை காட்டி மிரட்டி 5 பவுன் தங்கச்சங்கிலியையும், அவரது காதை அறுத்து தங்க கம்மல்களையும் பறித்துக்கொண்டு தப்பிச்சென்றார்.

இதுபற்றி ஆதம்பாக்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்து அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை வைத்து விசாரித்து வந்தனர்.

இந்தநிலையில் அம்பேத்கர் நகர் பகுதியில் மாந்திரீகம் செய்துவிட்டு குடிபோதையில் சுற்றிக்கொண்டு இருந்த விக்னேஷ் (21) என்பவரை பிடித்து போலீசார் விசாரித்தனர்.

அப்போது அவர், சுலோச்சனாவின் காதை அறுத்து நகை பறித்துச்சென்றதை ஒப்புக்கொண்டார். இதையடுத்து விக்னேசை கைது செய்த போலீசார் தொடர்ந்து அவரிடம் விசாரித்து வருகின்றனர்.

* பணம் தர மறுத்ததால் திருவான்மியூர் பகுதியை சேர்ந்த மூர்த்தியை (45) கத்தியால் குத்தியதாக, திருவான்மியூர் பெரியார் நகரை சேர்ந்த சேகர் (35) என்பவரை போலீசார் கைது செய்தனர்.

* தரமணி பட்டர் தெருவை சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி (40) என்பவரது வீட்டின் பூட்டை உடைத்து பீரோவில் இருந்த 2 பவுன் தங்கநகை, ½ கிலோ வெள்ளி ரூ.10 ஆயிரம் ஆகியவற்றை மர்மநபர்கள் திருடிச்சென்றனர்.

* வீட்டின் மாடியில் இருந்து கடந்த 24–ந்தேதி தவறி விழுந்து படுகாயம் அடைந்த அம்பத்தூரை அடுத்த ராமாபுரம் பகுதியை சேர்ந்த தினேஷ் (25) நேற்று முன்தினம் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பலனின்றி இறந்தார்.

* முன்விரோதம் காரணமாக கடந்த 27–ந்தேதி அம்பத்தூரை அடுத்த கள்ளிக்குப்பம் காந்தி நகரை சேர்ந்த அசோக்கை (22) கிரிக்கெட் ‘ஸ்டெம்பால்’ தாக்கிய தமிழரசன் (23) கைது செய்யப்பட்டார்.

* திருவொற்றியூர் கலைஞர் நகரில் வசிக்கும் சம்பூரணம் (58) நேற்று காலை நடைபயிற்சி சென்றபோது மோட்டார் சைக்கிளில் வந்த மர்மநபர்கள் 2 பேர், அவரது கழுத்தில் கிடந்த 5 பவுன் தங்கச்சங்கிலியை பறித்துச்சென்றனர்.

மேலும் செய்திகள்