இரிடியம் விற்பதாக கூறி ரூ.1,500 கோடி மோசடி செய்ய திட்டம் தீட்டிய 11 பேர் கைது
இரிடியம் விற்பதாக கூறி ரூ.1,500 கோடி மோசடி செய்ய திட்டம் தீட்டிய 11 பேரை தேனியில் போலீசார் கைது செய்தனர். இதுதொடர்பாக சென்னையை சேர்ந்த தரகர்கள் 2 பேரை தேடி வருகின்றனர்.
தேனி,
தேனி அருகே உள்ள அன்னஞ்சியை சேர்ந்தவர் ஹரிபிரசாத் (வயது 36). விவசாயி. அதே பகுதியை சேர்ந்தவர் குமரேசன் (44). குமரேசனின் வீட்டுக்கு வெளியூரை சேர்ந்த 10–க்கும் மேற்பட்டவர்கள் வந்து தங்கி இருந்தனர்.
இந்த நிலையில் குமரேசன் மற்றும் அந்த கும்பல் ஹரிபிரசாத்திடம் தங்களிடம் அதிக சக்தி வாய்ந்த விலை மதிப்புள்ள இரிடியம் இருப்பதாகவும், இதனை வாங்க தயாராக உள்ள நபர்களை அழைத்து வந்தால் விற்பனை தொகையில் கமிஷன் தருவதாகவும் கூறியுள்ளனர்.
அவர்கள் மீது சந்தேகம் அடைந்த ஹரிபிரசாத் அல்லிநகரம் போலீசில் நேற்று காலை புகார் கொடுத்தார். இதையடுத்து குமரேசன் வீட்டுக்கு சென்ற போலீசார் குமரேசன், அவருடைய மனைவி சாந்தி (40) உள்பட 11 பேரை கைது செய்தனர்.
அந்த வீட்டில் இருந்த ஒரு அட்டைப் பெட்டி, மின்சாரம் பாயாமல் தடுக்கும் கையுறை, துண்டு வயர் போன்றவற்றை போலீசார் கைப்பற்றினர். விசாரணையில் அவர்கள் தங்களிடம் சக்தி வாய்ந்த இரிடியம் இருப்பதாக கூறி ரூ.1,500 கோடி வரை மோசடி செய்ய திட்டம் இருந்தது தெரியவந்தது.
இந்த கும்பலுக்கு சென்னையை சேர்ந்த சண்முகசுந்தரம், செல்வம் ஆகிய 2 பேர் தரகர்களாக இருந்து தமிழகத்தில் பல்வேறு பகுதிகளிலும் இரிடியம் விற்பனை செய்ய பல்வேறு முக்கிய நபர்களை சந்தித்து வந்ததாகவும் தெரியவந்தது.
சண்முகசுந்தரம், செல்வம் ஆகியோரை போலீசார் தேடி வருகின்றனர்.
அந்த கும்பல் ஒரு வித்தியாசமான அட்டைப் பெட்டியை தயார் செய்து அதற்குள் இரிடியம் இருப்பதாகவும், சக்தி வாய்ந்தது என்பதால் வெறும் கையால் தொட்டால் ‘ஷாக்’ அடிக்கும் என்று கூறி ஏமாற்ற திட்டம் தீட்டி இருந்தனர். விசாரணையின்போது போலீஸ்காரர் ஒருவர் அதனை தொட்டு பார்த்தபோது ஷாக் அடிக்கவில்லை.
அதற்குள் பேட்டரி, அரிசி அளக்கும் நாழி, வயர் போன்றவை வைத்து, பேட்டரியில் இருந்து மின்சாரம் பரவி அட்டைப் பெட்டியின் ஓரத்தில் ஷாக் அடிக்கும் வகையில் தகடு பதிக்கப்பட்டு இருந்தது.
மேலும், பெட்டியை திறந்தால் மகத்துவம் போய்விடும் என்றும், கையுறை அணிந்துதான் அதனை தொட்டுப் பார்க்க வேண்டும் என்று கூறியும் அந்த கும்பல் மோசடி செய்ய திட்டம் தீட்டி இருந்தது விசாரணையில் தெரியவந்தது.